குறைவாக சிரித்து அதிகமாக அழுவோம்

குறைவாக சிரித்து அதிகமாக அழுவோம்(வெள்ளி சிந்தனை)
அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)அறிவிக்கிறார்கள்:-எனக்கு குர் ஆனை ஓதி காட்டுவீராக என என்னிடம் ஒருமுறை நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதரே,குர் ஆனை தங்களுக்கு நான் ஓதி காட்டுவதா?தங்கள் மீது தான் அக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டுள்ளதே என்றேன்.
அதற்கு நபி(ஸல்)அவர்கள் குர்ஆனை மற்றவர்கள் ஓத நான் கேட்க ஆசைப்படுகிறேன் என்றனர்.அதன்படி நான் சூரத்துல் நிசா 41வது வசனத்தை ஓதினேன்.
நபியே!ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியை நாம் கொண்டு வரும் பொழுதும்,இவர்களுக்கு அதாவது உங்களின் சமூகத்திற்கு உம்மை நாம் சாட்சியாக கொண்டு வரும் பொழுதும்(நிலைமை)எவ்வாறு இருக்கும்?என்ற வசனத்தை நான் அடைந்ததும் இப்பொழுது போதும் என(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நான் நிறுத்தி விட்டு (ஸல்)அவர்களை பார்த்தேன்.அப்போது (ஸல்)அவர்களின் இரு கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.(நூல்:புகாரி-முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்)அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.அது போன்றதோர் சொற்பொழிவை நான் ஒரு போதும் கேட்டதில்லை.நபி(ஸல்)அவர்கள் அச்சொற்பொழிவில் நான் அறிவதை நீங்கள் அறிந்தால்….குறைவாக சிரிப்பீர்கள்,அதிகமாக அழுவீர்கள் எனக்குறிப்பிட்டார்கள்.
அதனை செவிமடுத்த நபி தோழர்கள் தங்களின் முகத்தை மறைத்து கொண்டனர்.அவர்களிடமிருந்து அழுகையின் முனகல் சப்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தது.(அறிவிப்பாளர்:ஹழ்ரத் அனஸ்(ரலி),நூல்:புகாரி-முஸ்லிம்)
அல்லாஹ்வின் பயத்தால் அழக்கூடிய மனிதர்(பால் மடுவிற்கு மீளும் வரை)ஒரு பொழுதும் நரகில் நுழைய மாட்டார்.அல்லாஹ்வின் பாதையில் மேனியில் படிந்த புளுதியும்,நரக நெருப்பின் புகையும் ஒன்று சேராது என நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூஹுரைரா(ரலி)அறிவிக்கிறார்கள்.(நூல்:திர்மிதி)
ஹழ்ரத் அபூ உமாமா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:-இறைவனுக்கு மிகவும் பிடித்த இரண்டு துளிகள் மற்றும் இரண்டு அடையாளங்கள்:-
இறைவனின் பாதையில் சிந்திய இரத்த துளிகளும்,இறை அச்சத்தால் வடிந்த கண்ணீர் துளிகளுமாகும்.
இறைவனின் பாதையில் ஏற்பட்ட காய தழும்புகளும்,தொழுகையில் ஏற்பட்ட நெற்றி தழும்புகளுமாகும் என்றார்கள்.(நூல்:திர்மிதி)
யா அல்லாஹ்!எங்களை பாவங்களை விட்டும் பாதுகாப்பாயாக,உனது அச்சத்தோடு வாழும் நன்மக்களாக எங்களை ஏற்று கொள்வாயாக.
தவறுகளை உணர்ந்து குறைவாக சிரித்து அதிகமாக அழுது உன்னிடம் கண்ணீரோடு தவ்பா செய்யும் நசீபை எங்களுக்கு தந்தருள்வாயாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
—–
Tags: 

Leave a Reply