குறைந்தழுத்த மின்சாரம் இரவில் தூக்கத்தை தொலைக்கும் மக்கள்

ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் வீடுகளில் மோட்டார்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட மின்பொருட்கள் பழுதாகி உள்ளது.
மண்டபம் முகாம் ஏகேஎஸ் தோப்பில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக குறைந்த அழுத்த மின்சாரம் இருந்தது. இதையடுத்து அப்பகுதிக்கென கடந்த வருடம் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் கூட மின்சாரம் குறைவாக வருகிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள மின்பொருட்கள் முறையாக இயங்க 240 வோல்ட் மின்சாரம் தேவை. ஆனால் பகல் நேரங்களில் வருவது 200 வோல்டிற்கும் குறைவான மின்சாரம்தான்.

இரவு நேரங்களில் 150 முதல் 170 வோல்ட் மின்சாரம் மட்டுமே வருகிறது. அதனால் இரவில் வீடுகளில் பல்புகள் மின்மினி பூச்சிகள் போல் எரிகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை இப்பிரச்னையை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகளில் உள்ள மோட்டார்கள் இயங்குவதில்லை. டியூப்லைட்கள், பிரிட்ஜ்கள், மின்சார அடுப்பு போன்றவைகளும் இயங்குவது கிடையாது. 2 அல்லது 3 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சாரம் ஏற்ற இறக்கமாக உள்ளது. மோட்டார்கள் வேலை செய்யாததால் வீடுகளில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. குளிக்கவும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறைந்த அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தி அவசர தேவைக்கு தண்ணீர் எடுத்த 50க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பழுதாகி உள்ளன. இதுதவிர 50க்கும் மேற்பட்ட பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்பொருட்களும் பழுதாகி உள்ளன. இரவு நேரங்களில் மின்விசிறிகளும் இயங்காததால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் ஏகேஎஸ் தோப்பில் உள்ள டிரான்ஸ்பார்மர், மின்சார வயர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் கூறுகையில், பெரிய போராட்டத்திற்கு பிறகு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் சரியாக கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக அதிக விலையில் வாங்கிய டிவி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகி விடுகின்றன. ஏகேஎஸ் தோப்பு பகுதியில் குடியிருப்பு வீடுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் மின்தேவையும் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது ஒரு லைன் கட்டாகி விடுகிறது. இதனால் ஒரு சில வீடுகளுக்கு மின்சாரம் இருக்கும். பல வீடுகளுக்கு மின்சாரம் இருக்காது. தொடர்ந்து இப்பிரச்னை நீடித்து வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் தேவைக்கு ஏற்ப பழைய மின் வயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags: ,

Leave a Reply