கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு சங்க கால அரிய பொருட்கள் சேகரிப்பு : மைய இயக்குனர் தகவல்

கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு சங்க கால அரிய பொருட்கள் சேகரிப்பு : மைய இயக்குனர் தகவல்
ராமநாதபுரம்: “ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் நடத்திய அகழாய்வில், கீழடியை மிஞ்சும் வகையில் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன” , என அழகன்குளம் அகழாய்வு மைய இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த மே 9ல் 55 லட்சம் ரூபாய் செலவில் அரசுப் பள்ளி பகுதியில் அகழாய்வுப் பணியை துவக்கினர். தற்போது பள்ளி அருகே தனியார் பட்டா நிலங்களில் அகழாய்வுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1984ல் நடந்த அகழாய்வில், சங்க கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட ஆய்வு: அதை தொடர்ந்து தொல்லியல் துறை இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகளை இப்போது மேற்கொண்டு வருகிறது.
இந்த பணிகள் நான்கு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ஆகஸ்ட்டில் பணிகள் நிறைவு பெறுகிறது. தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், பணியில் சற்று இடையூறு ஏற்பட்டுள்ளது.
அகழாய்வு பணி குறித்து அழகன்குளம் மைய இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது: இங்கு அகழாய்வு செய்ததில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் பயன்படுத்திய பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.
கீழடி அகழாய்வு மையத்தை காட்டிலும், பல மடங்கு பொருட்கள் அழகன்குளம் அகழாய்வில் கிடைத்துள்ளன. சுடுமண் சிற்பம், சங்குகள், யானை தந்தங்களால் ஆன அணிகலன்கள், இரும்பிலான பொருட்கள், மண்பாண்டங்கள் போன்ற அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை
ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பகுதியில் சேகரிக்கப்பட்ட பழந்தமிழர்களின் பொருட்கள் ஒரு சிலவற்றை காட்சிப்படுத்துவோம். ஒரு மாதத்துக்குப் பின் அனைத்து பொருட்களும் ஆவணப்படுத்தப்பட்டு, மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றார்.
அகழாய்வு மைய பொறுப்பாளர் சக்திவேல் கூறியதாவது: இடையூறு இல்லாமல் இருந்ததால், எங்களால் பொருட்களை சேகரிக்க முடிந்தது. குறிப்பாக கழுத்தில் அணியும் மணி, கடுகை விட சிறியதாக இருக்கும்.
அதில் தலைமுடி கூட உள்ளே செல்ல முடியாத அளவுக்கு ஓட்டை போட்டு, நுாலால் மணிகளை கோர்த்து பண்டைய தமிழர்கள் அணிந்துள்ளனர். இயற்கையை கடவுளாக வணங்கியதால், சிலைகள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன என்றார்.


Tags: , , , , , ,

Leave a Reply