காற்றுக்கென்ன வேலி….! கடலுக்கென்ன கூரை…..!!

காற்றுக்கென்ன வேலி….! கடலுக்கென்ன கூரை…..!!
காஞ்சிஎஸ்.ஃபைசுதீன் (9894231170)

கடல் நீர் சூடாகாமல் இருக்க கூரையை எழுப்பினால் பரந்து விரிந்த அத்தனை கடல்தூரத்திற்கும் கூரை எழுப்பிட இயலுமா?
கடந்து வந்து கலைத்துச் செல்லும் காற்றைத்தடுக்க நெடும் வேலி அமைத்தல் கூடுமா?
கடலுக்கு கூரை எழுப்பலும் காற்றுக்கு வேலி அமைத்தலும் கேலிக்கு உள்ளாகும் செயல் அல்லவா?

அது போன்றதோர் செயலைத்தான் முத்தலாக் பிரச்னையில் மத்திய அரசு முனைந்து செய்து கொண்டிருக்கிறது…!

உலகளாவிய ஒரு மதத்தின் –உலகளாவிய ஒரு பொது மறையின் அறவுரைகளை அறுத்தெறிய முனைந்து கொண்டிருக்கிறது…!
உலக முஸ்லீம்களுக்கே பொதுவான குர்ஆனின் ஓர் எழுத்தைக்கூட ஓர் தனிமனிதனோ தனிஅரசாங்கமோ தனிநாடோ தன்னிச்சையாக மாற்றிவிட முடியாது… மாற்றவும் கூடாது….மாற்ற முனைவது இறைக்குற்றம்–அப்படி செய்திட முனையும் அரசின் செயல் , ஒரு சமுதாயத்திற்கே செய்யும் துரோகம்…!
ஆம்;
தொழுகை என்பதும் தொழுகையின் வழிமுறை என்பதும் தொழுகையின் ரக்அத்துகள் என்பதும் இந்த இந்திய அரசின் கீழுள்ள முஸ்லீம்ளுக்கு மட்டுமே பொதுவானதல்ல; அதேபோல திருக்குர்ஆனும் அதில் கூறப்படும் அனைத்தும் இந்திய முஸ்லீம்களுக்கு மட்டுமே பொதுவானதல்ல….
இந்தியாவிலுள்ள இப்ராஹிமிற்கு பொதுவான இவைகள், அமெரிக்காவிலுள்ள அமீர்ஜானுக்கும்
பிரான்ஸிலுள்ள பீர்முஹம்மதுக்கும் ஜெர்மெனியிலுள்ள ஜெயிலானிக்கும் ரஷ்யா நாட்டிலுள்ள ரஹீமிற்கும் பொதுவானவையே… இருபத்து நான்கு மணி நேரமும் உலகத்தின் ஏதோ ஓர் திசையில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ‘பாங்கின்’ ஓசை எப்படி பொதுவானதோ–” லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ” எனும் இறுதி மொழி உலகத்தோர் அனைவருக்கும் எப்படி உறுதிமொழி ஆனதோ அதே போலத்தான் இவ்வுலகின் அனைத்து நாட்டினருக்கும் பொதுவானவை–குர்ஆனிய போதனைகள்…! அதன்படியே , உலக முஸ்லீம்கள் அனைவருமே அடிபணிந்து இயங்குகிறார்கள்…
இந்நிலையில், இந்தியஅரசு ஏதோ அகில உலகையே ஆளும் அரசாக எண்ணிக்கொண்டு முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டுவர முனைவது எள்ளளவும் நியாயமில்லை…
மனிதராய்ப் பிறந்து , புனிதராய் நடந்து, தீர்க்கதரிசியாய் வலம்வந்து, அல்லாஹ்வின் ‘வஹி’யை உலக மக்களுக்கு உபதேசித்து, இன்று விஞ்ஞானம் சொல்வதை அன்றே குர்ஆனின் ஆயத்துக்களாகச் சொன்ன நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின், அலீஃப்-லஆம்-மீய்ம் எனும் ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் வரிகளும் கூட உலக மக்கள் நலனுக்கானவை… அதை மாற்ற விடமாட்டோம்…. மாற்றி அமைக்கும் உரிமையும் அருகதையும் உலகின் ஓர் மூலையில் இருக்கும் ஓர் நாட்டிற்கோ நாட்டின் தலைமையெனக் கூறிக்கொள்ளும் தனி மனிதனுக்கோ இல்லவே இல்லை. உலகோர் மனங்களின் உச்சத்தை தொட்ட,
குர்ஆன் ஆயத்துக்களின் ஆளுகைக்கு உட்பட்டோரை , உளுத்துப்போகும் சட்டங்களால் உருமாற்றம் செய்திட இயலாது… உள்ளொன்று வைத்து புறமொன்று பிரதிபலிக்கும் சட்டங்களின் பின்னணி எங்களை மடைமாற்றம் செய்திடவும் முடியாது…
இந்த மசோதா, ஷரீயத் எனும் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதென எங்களுக்குத் தெரியும்…. அதேநேரம், இந்த மசோதா எங்களைப்போன்ற மத சிறுபான்மையினோருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது என்பதையும் இன்றைய ஆளும் மத்திய அரசும் புரிந்து செயல்பட வேண்டும்.மதச்சார்பற்ற நாடு எனும் இந்திய அரசியலமைப்புச் சட்ட மாண்பை நாம் அனைவருமே ஒன்றிணைந்து போற்றிக் காக்க வேண்டும்… அல்லாஹ் ஒருவரை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்காமலே தண்டிக்கவும் செய்வான்… அதேசமயம், ஆட்சியில் அழகாக அமர வைத்தும் தண்டிப்பான்… இது புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்…
ஆகவே , முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் என ஒன்றைக் கொண்டுவந்து , உலகளாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரீயத் சட்டம் எனும் யானைப் படைக்கு எதிராக இந்தியச்சட்டம் எனும் எறும்புப்படை ஒன்றை நிறுத்திட முயற்சிப்பது தேவையற்றதோர் வீண்முயற்சி…. படைத்தவனின் சட்டங்களுக்கு எதிராக படைக்கப் பட்டவனின் சட்டங்கள் எதிர்த்து நிற்க முடியாதவை …!
கடலுக்கு எப்படி கூரை….? காற்றிற்கு எப்படி-யார் வேலி போடமுடியும்….? வீண்முயற்சிகளை தடுக்க முனைவோம்…

Tags: , , ,

Leave a Reply