கல்விக் கருவூலம் கானலில்லாஹ் (ரஹ்)

 

மவ்லவி அல்ஹாஜ், சிராஜுல் உம்மா

எஸ்.அஹமது பஷீர் சேட் மன்பயீ

தலைமை இமாம் : பெரிய பள்ளிவாசல், முதுகுளத்தூர்,

இராமநாதபுரம் மாவட்டம்.

  1968 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எனது ஏழாண்டுக் கல்விக் காலங்களில், லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் அன்றைய முதல்வராக பொறுப்பில் இருந்த கண்ணியத்திற்குரிய எனது தனிப்பாசத்துக்கு உரிய கானலில்லாஹ் அப்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் எனது நினைவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணியவான் ஆவார்கள்.

1864 –ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று 2013 – ஆம் ஆண்டில் 150- ஆம் ஆண்டு விழாவில் சிறப்புமலர் வெளியிட்டு ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் 150- ஆண்டு காலச்சேவையை நினைத்து, ரஹ்மானுக்கு நன்றி செலுத்தும் இந்த நேரத்தில் ஆரம்ப நிலையை நினைவு கூறுவது ஏற்றமாகும். குடத்திலிட்ட விளக்காக இருந்த ஜாமிஆ மன்பவுல் அன்வார் 1945- ஆம் ஆண்டு அல்லாமா ஷைகுல்மில்லத் அமானி ஹஜ்ரத் (ரஹ்) அவர்களின் வருகைக்கு பிறகுதான் குன்றின் மேளிட்ட விலக்காக ஒளிவீசத் தொடங்கியது. ஷைகுல் மில்லத் அவர்களிடம் 21 ஆண்டுகள் பயிற்சி பெற்று 1966 ஆம் ஆண்டு ஷைகுல் மில்லத் அவர்களின் வபாத்திற்குப் பிறகு, நாஜிராப் பொறுப்பேற்று 1976 ஆம் ஆண்டு வரை பணி செய்து அல்லாஹ்வின் நாட்டப்படி தன் பணியை நிறைவு செய்து முடித்தார்கள். அல்லாமா கைருல் மில்லத் அப்துல்லாஹ் கானலில்லாஹ் ஹள்ரத் அவர்கள் பெற்றெடுக்காத பிள்ளைகளில் ஒருவனாக அவர்கள் குடும்பத்தில் அனைத்தையும் தெரிந்தவனாக, இன்றும் அவர்கள் அசாப்பிள்ளை வகையறாக்களில் உள்ள குடும்பத்தினரை அறிந்தவனாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

கல்லூரி மாணவனாக இருந்தாலும் ஹஜ்ரத் அவர்களின் தனிச் செயலாளர் போலவே எனது பணிவிடைகள் இருந்தன. ஹஜ்ரத்னா அவர்களிடம் நான் பெற்ற பக்குவம், பயிற்சி இத்தனைக்கும் மேலாக, எனக்கு நிக்காஹ் நடத்தி வைத்து ஸனது வழங்கி துஆ செய்த பரகத்தால் எனது ஊரில் இன்று வரை 37 – ஆண்டுகளாக, இமாமாக ஊழியம் செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.

கானலில்லாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கு வரும் கடிதங்களை கண்டு பதில் எழுதுவது, சில ஆங்கிலப் படிவங்களுக்கு விளக்கமளிப்பது நண்பர்கள் உறவினர்களைச் சந்திக்கும் போது உடன் இருப்பது, மருத்துவம் மற்றும் முக்கியத்துவமான பயணங்களில் உடன் செல்வதற்கு எல்லாம், ஹஜ்ரத் அவர்களின் நம்பிக்கையான எனக்கு வாய்ப்புகள் கொடுத்து பாசம் காட்டியவர்கள் கானலில்லாஹ் ஹள்ரத்னா அவர்கள்.

அந்த உறவிலும் நெருக்கத்திலும் நான் வளர்ந்ததே எனது பாக்கியம் ஆகும். ஹள்ரத்னா அவர்களின் நிர்வாகக்காலங்களில் அவர்கள் மாணவர்களிடம் காட்டிய கண்டிப்பும் ஒழுங்கும் ஆரம்பகாலங்களில் சில மாணவர்களுக்கு கடுப்பாகவும், கண்டிப்பாகவும் தெரிந்தது. அதனால் ஏற்பட்ட பண்பு, பின் நாளில் அவர்களை மேலான மனிதனாக வாழவைத்தது. பிற்காலத்தில் இதை நினைத்து அவர்கள் இன்பமடைந்தார்கள்.

ஷைகுல் மில்லத் அல்லாமா ஜியாவுத்தீன் அஹ்மது அமானி ஹள்ரத் அவர்களின் வபாத்திற்கு பிறகு 1966 ஆம் ஆண்டு கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்ற ஹள்ரத் அவர்களின் இறுக்கமான கட்டுப்பாடு முறை, கொஞ்சம் விமர்சனத்துக்கு உரியதாகவும் இருந்தது. ஹள்ரத்னா அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது, மாணவர்களின் வருங்கால முன்னேற்றத்திற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களிடம் அப்படி இருந்தால்தான் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கை, அவர்களின் கருத்தில் இருந்தது. அன்னாரின் இறுதிக் காலம் வரை அதுவே சிறந்ததாகவும் இருந்தது.

மாணவர்களிடம் எந்தப்பண்பை போதிக்கிறார்களோ, அதே பண்பொழுக்கத்தை தானே தனது வாழ்வில் கடைப்பிடித்தும் வழிக்காட்டினார்கள். தொழுகை போன்ற இபாதத்களிலும் சுன்னத், நபிலான அமல்களிலும் ஹள்ரத்னா அவர்கள் அதிகம் பேணுதல் உள்ளவர்களாக இருந்தார்கள். முடியாத காலங்களிலே கூட முடிந்தவரை பேணிக்கையுடன் நடந்து பொறுமை கொண்டார்கள். ஹள்ரத்னா அவர்கள் இதை அன்னாரின் உடன் இருந்தபோதும் வெளியூர் சென்று இருக்கும் போதும் கண்டு களித்தவன் நான். 1973 ஆம் வருடம் ஹள்ரத்னா அவர்களுக்கு தஞ்சாவூர் கண் மருத்துவமனையில் கண் ஆப்பரேசன் செய்யப்பட்டது.

அப்போதும் அன்னாரின் பணிவிடைக்காக உடன் இருந்தேன். தொழுகையின் வக்த்து வந்து விட்டால் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுவதற்கு ஆசைப்படுவார்கள்;

இயலாத நிலையிலே:

பள்ளிவாசல் அருகிலே இல்லாவிட்டால் அப்போது தங்கி இருக்கும் இடத்திலேயே வக்த்து வந்ததும் தொழுவார்கள். நாங்கள் இருவர் மட்டுமே இருந்தாலும் அப்போதும் கூட ஜமாஅத்தாகவே தொழ விரும்புவார்கள். ஹள்ரத் அவர்களுக்கு முடிந்தால் இமாமாக நின்று தொழவைப்பார்கள் முடியாவிட்டால் என்னை இமாமாக நிறுத்தி எனது பின்னால் அவர்கள் நின்று தொழுவார்கள்.

(குறிப்பு : இக்கட்டுரையாளர் மேற்கண்ட நிகழ்வின் பரக்கத்தால், ஸனது வாங்கியது முதல் இன்று வரையிலும் இமாமாகவே பணி செய்து வருகிறார்)

நான் அன்னாரின் மாணவனாக இருந்தபோதும், என்னைத் தனக்கு இமாமாக நிறுத்தித் தொழவைக்க சொல்கிறார்களே என்ற பயம் வரும். ஜமா அத்தாகவும் தொழுவதில் அவர்களுக்கு இருந்த உறுதியும் எனக்கு வரும்.

எத்தனை பெரிய கல்விமான் அவர்கள். எவ்வளவு வயதில் முதியவர்கள். தன்னைக் காண எவரும் இல்லாத நிலையிலும் இறைவனின் அச்சமும் பக்தியும் கொண்டு எத்தனை பெரிய பக்குவ நிலையில் கடமையாற்றுவார்கள் தெரியுமா? கண் சிகிச்சை செய்து கொண்டவர்கள் முகத்தில் சில நாட்களுக்கு தண்ணீர் படக்கூடாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கண்ணுக்கு அசைவு அலட்டல் கொடுக்கக் கூடாது என்பது நாம் தெரிந்ததே. அந்த நேரத்தில் அதிகமான பக்குவத்துடன் இருக்க வேண்டும்.

அந்த நிலையில் இருந்த ஹள்ரத்னா அவர்கள் கண்ணில் வேதனையோடு இருந்தார்கள். தன்னால் எழுந்துக் கூட உட்கார முடியவில்லை. கண்ணில் வலி அதிகமாக இருந்தது. அப்போது என்னை அழைத்து என்னால் எழுந்து உட்கார முடியவில்லை. அசைந்தால் கண் அதிகமாகக் குத்தெடுக்கிறது. (வலி கொடுக்கிறது) எனக்கு நீயே தயம்மம் செய்துவிடு. நான் இஷாரா செய்து தொழுகையை நிறைவேற்றிக் கொள்கிறேன் என்று சொல்லித் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

இது எனக்கு ஒரு மாபெரும் படிப்பினையாக இருந்தது. ஹள்ரத் அவர்களின் உடல்நிலை அப்போது எப்படி இருந்தது என்று எனக்கு தெரியும். அன்னாரின் சிரம நிலையை நான் உணர்ந்து இருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் அன்னார் மனதில் இருந்த பக்தியும், கடமை உணர்வும், கண்கலங்கி நினைத்துப் பார்க்கும் சம்பவமாக இருந்தது. இன்று நினைத்தாலும் அப்படி நடப்பது நமக்கும் நல்ல பாடமாக இருக்கிறது.

ஹள்ரத்னா அவர்கள் உளுச்செய்தால் அந்த உளுச்செய்த தண்ணீர் ஈரத்தைத் துண்டால் துடைக்க மாட்டார்கள். அப்படியே ஈரமாகவே வைத்து விடுவார்கள். இது அன்னாரின் வழமையாக இருந்தது. இது பெரிய பெரிய இமாம்கள், நாதாக்களின் பக்குவமான தபீஅத் ஆகும். இந்த ஒரு சின்னஞ்சிறிய பக்குவத்தைக் கூட ஹள்ரத்னா பேணி இருந்தார்கள் என்றால் மறைமுகமாக, மானசீகமாக எத்தனைவித ஆதாபுகளை அவர்கள் பேணி இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

1966 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான மவ்லவி பாஜில், மவ்லவி ஆலிம்களை உருவாக்கி ஷரீஅத் பணிக்காக உலகிற்கீந்த ஹள்ரத்னா அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி 31-12-1976 ஆம் நாள் ஹிஜ்ரி 07-01-1397 புதன்கிழமை தஹஜ்ஜத் தொழுகை தொழுதுவிட்டு, பஜ்ரு தொழுகைக்கு தயாராக இருந்த நிலையில் பாங்கு சொல்வதற்கு முன்பாகவே ஸோபாவில் சாய்ந்த நிலையிலேயே வஃபாத்தானார்கள். பொதுவாகவே உலமாக்கள் தங்களது கடிதங்களின் முடிவிலும் பத்வா, ஸனது போன்றவற்றிலும் கையெழுத்திட்டு உஃபிய அன்ஹு என்றே எழுதுவார்கள். ஆனால் ஹள்ரத் அவர்கள் கையெழுத்துப் போட்ட பின்பு கானலில்லாஹி       தஆலா என்றுதான் எழுதுவார்கள். அல்லாஹு அக்பர் ! “மன் கானலில்லாஹி கானல்லாஹீ லஹு” யார் அல்லாஹ்வுக்காக ஆகிவிட்டாரோ, அவருக்கு அல்லாஹ் ஆகி விட்டான் என்ற நபிமொழிக்கொப்ப, தன்னை அல்லாஹ்விற்காக அர்ப்பணித்து பல்லாயிரம் ஃபத்வாக்களில், பல்லாயிரம் ஸனதுகளில் கானலில்லாஹி தஆலா என்று கையெழுத்திட்ட கானலில்லாஹி     தஆலா அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ! ஆமீன்.

 

( லால்பேட்டை மன்பஉல் அன்வார் 150 ஆம் ஆண்டு விழா மலரிலிருந்து )

Tags: , , , ,

Leave a Reply