கலாம் நினைவிடம் அருகே ரயில் நிலையம்: அன்வர்ராஜா எம்.பி. தகவல்

ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடம் அருகே விரைவில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.அன்வர்ராஜா சனிக்கிழமை தெரிவித்தார்.

 ராமநாதபுரத்தில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியிலுள்ள மக்களவை உறுப்பினர்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஸ்டா ஜோரி வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தோம்.  அவற்றில் பெரும்பாலானவற்றை விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றுவதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

 குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நினைவிடம் அருகில் தங்கச்சிமடத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ரயில் நிலையம் அமைந்தால் வெளிமாநில, மாவட்ட பயணிகள் வந்து செல்ல வசதியாக அமையும்.

 சென்னையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில், ராமநாதபுரத்துக்கு அதிகாலை 3 மணிக்கு வருவதால் விடியும் வரை இரவு ரயில் நிலையத்திலேயே ஏழை, எளியவர்கள் தங்கியிருந்து அதன் பின்னரே அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில், அரியலூர்,விருத்தாசலம் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்கப்பட வேண்டும். அவ்வாறு இயக்கினால் அதிகாலை 3 மணிக்கு வருவதற்குப் பதிலாக காலை 6 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். இதனால் பொதுமக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

  இது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர் என்றார்.

Tags: , , , ,

Leave a Reply