கலாசார படிப்புக்கு ’நோ’ டில்லி பல்கலை அதிரடி

நாட்டின் மிக பிரபலமான, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், யோகாசனம் மற்றும் கலாசாரம் தொடர்பான, குறுகிய கால பாடத் திட்டங்களை சேர்க்க, பல்கலைக்கழக கல்வி கவுன்சில் மறுத்துள்ளது.

இந்து மத வேதங்கள், புராணங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய, கலாசாரம் மற்றும் யோகாசனம் குறித்த பாடத் திட்டங்களை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் என, பா.ஜ.,வைச் சேர்ந்த, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டிருந்தது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மானிய உதவி வழங்கும், யு.ஜி.சி., அமைப்பும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிறப்பித்த உத்தரவில், கலாசாரம், யோகாசனம் பாடத் திட்டங்களை சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இதுகுறித்து முடிவெடுக்க, பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில், சமீபத்தில் கூட்டப்பட்டது. பல்கலைக்கழக கல்வித் திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டுமானால், கல்விக் கவுன்சில் கூட்டப்பட வேண்டியது அவசியம். அந்த கூட்டத்தில், கலாசாரம் மற்றும் யோகாசனம் தொடர்பான பாடத் திட்டங்களை, பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில் சேர்ப்பதற்கில்லை என, முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை தலைவர்களின் கருத்தும் கேட்டறியப்பட்டது. அதன்படி எடுக்கப்பட்ட கவுன்சில் முடிவு, மனித வள மேம்பாட்டுத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் முடிவு, மத்திய அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Tags: , , ,

Leave a Reply