கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு உத்தரவு

கட்டுமானத் தொழிலின் போது, பணியிடத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த 1994-ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, திமுக ஆட்சிக் காலத்தில் இந்தத் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த நிவாரணத் தொகை என்பது, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டு இறக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

தொழிலாளர்கள் சாலை விபத்து உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக உயிரிழக்க நேர்ந்தால், அவர்களுக்கு நிவாரணத் தொகை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 2011-ஆம் ஆண்டு நிவாரண நிதி அளிப்பது தொடர்பான நடைமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு எங்கே, எப்படி விபத்து நடந்து அவர்கள் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், இயற்கை மரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.17 ஆயிரம் அளிக்கவும் உத்தரவு வெளியிடப்பட்டது.

இப்போது ரூ.5 லட்சமாக உயர்வு: அதிமுக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டது. கட்டுமான பணியின்போது உயிரிழந்தால், அந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், விபத்து போன்ற காரணங்களால் உயிரிழப்போருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் இதற்கான உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகை குறித்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த அறிவிப்பால் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்திலுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பயன்பெறுவர் என்று தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: , , , , , ,

Leave a Reply