கடலின் பயணம் ஹஜ் .. !

கடலின் பயணம் ஹஜ் .. !

 

நாம் பார்க்க

நதிகள் நடந்து போய்

கடலைச் சேரும் !

 

ஆனால்… ஒரு அதிசயம்

கடலே திரண்டு போய்

புனித கஅபாவைக்

காணப்போகிறதே…

அதுதான் ஹஜ்..!

 

இன்னும் சிறப்பாகச்

சொல்வதானால்

தாய் மடி தேடிச் செல்லும்

தொப்புள் கொடிகளின்

பயணமே … ஹஜ்.. !

 

மெய்யாகவே

சமத்துவபுர மென்றால்

மாநகர் மக்காதான் !

அங்கே தான்

நிறம் கடந்து இனம் கடந்து

மொழி கடந்து

இஹ்ராம் உடையணிந்து

வெள்ளைப் பறவைகளாய்

மக்கள் கூடுகின்றார்கள் !

 

அங்கே கூடிடும்

அத்தனை பேர் இதழ்களும்

லெப்பைக் அல்லாஹும்ம

லெப்பைக் என்று முழங்கும்

அழகே … அழகு !

 

அங்கே … ஸலாமும்

ஸலவாத்தும் ததும்பி வழியும்

 

சகோதரத்துவம்

கைகுலுக்கும் !

சமத்துவம்

புன்னகைக்கும் !

 

லாயிலாஹ இல்லல்லாஹு

முஹம்மது ரசூலல்லாஹ்

இந்த திருக்கலிமாவை

உலகிற்கு உரத்துச் சொன்ன

இறை இல்லம் கஅபா !

 

மாநகர் மக்கா

உலக முஸ்லீம்களின்

காதல் தேசம்

அதைக் காணத்துடிக்கும்

கண்கள் தான்

எத்தனை யெத்தனை !

கால்வாயில்

தண்ணீர் வரும் … !

கல்வாயில்

தண்ணீர் வருமா ..?

வரும் … வந்தது

அது தான் ஜம்ஜம் நீரூற்றாய்

ஐயாயிரம் ஆண்டுகளாக

வந்து கொண்டிருக்கிறது !

இது வல்ல அல்லாஹ்வின்

அருட்கொடையின்

அத்தாட்சியல்லவா !

 

பலர் பேசக் கேட்பது

மாநாடு !

ஆனால்…

அன்று அரபாஃத்திடலில்

நம் சங்கை நபிமணி (ஸல்)

பேச

ஒரு லட்சத்திற்கும் மேலான

மக்கள் திரண்டிருந்து

கேட்டார்களே …!

அது ஒரு சம்பவம் அல்ல

சரித்திரம் எனலாம்

 

இவைகளோடு

ஹஜ்ஜில்

நாம் காண வேண்டிய

இன்னொரு நகரமும் இருக்கிறது

அது எது தெரியுமா?

 

நம் பெருமானார் (ஸல்)

அவர்களுக்கு வாய்த்த

இன்னொரு தாய்மடி !

 

நபிகளாரின் வாழ்வியலின்

இரண்டாம் பாகத்தை

இனிப்பாக எழுதிய

எழில் நகரம் ! – இப்போது

தெரிகிறதா ?

அது தான் மாநகர் மதீனா !

 

அன்ஸாரிகளின்

அன்பு வெள்ளம் பாய்ந்த

செல்வச் சீமை !

 

ஆன்மீகத் தலைவராய்

பார்த்த அண்ணலாரை

அரசியல் வேந்தராய்

மக்களாட்சித் தலைவராக

அரியணையில் ஏற்றி

பூரித்து பார்த்த நகர் மதீனா…!

 

இப்படி

புனித மிக்க தலங்களைப்

பார்த்து வருவதே ஹஜ் !

இந்த ஹஜ்ஜின் பாக்கியம்

நமக்கும் கிடைக்க …

துஆச் செய்வோம் !

உலக முஸ்லீம்கள்

அனைவருக்கும்

தியாகப் பெருநாள்

வாழ்த்துக்கள்… !

 

 

நன்றி :

இளையான்குடி மெயில்

நவம்பர் 2011

 

Tags: ,

Leave a Reply