ஓசைகள் !

ஓசைகள் !

-ஜி. ஆசிப் அலி

சாலிஹுக்கு பருத்தி ஆலையில் சூப்பர்வைசர் உத்தியோகம். கைநிறையச் சம்பளம் இல்லை என்றாலும் கிடைக்கிற வருமானம், மனைவி-குழந்தையை ஒரு குறையுமின்றி வளர்க்கப் போதுமானதாக இருந்தது.

மனைவி மைமூனாவும் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். மார்க்கப்பற்றும், இறை அச்சமும் கொண்ட குணவதி. ஐவேளைத் தொழுவது, திருமறையை ஓதுவது போக, வீட்டிலேயே தையல் இயந்திரம் வைத்துத் துணிகளைத் தைத்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் கொண்டு குடும்பச் செலவுகளைச் சிரமமின்றி சமாளித்து வந்தாள்.

சாலிஹும் எந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாமல் நேர்மையாய் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனிடம் இருந்த ஒரே ஒரு குறை என்னவென்றால் ஐவேளைத் தொழுகையை ஒழுங்காகக் கடைபிடிக்காததுதான். நினைத்தால் தொழவேண்டியது, இல்லையென்றால் விட்டுவிட வேண்டியது.

மைமூனாவும் பலமுறை ஜாடை மாடையாகச் சொல்லிப் பார்த்து விட்டாள். பிரயோஜனமில்லை.

‘சரி பார்க்கலாம்…’ ‘இன்னைக்கு ஒரே அசதி. நாளையிலிருந்து ஒழுங்காத் தொழறேன்…’

‘எனக்கு ஒடம்பு சுகமில்லைமா…’ இது போன்ற காரணங்களைச் சொல்லிச் சொல்லியே அவன் தப்பித்துக் கொண்டிருந்தான். கணவனின் போக்கு கவலையைத் தந்தது மைமூனாவுக்கு.

‘அல்லாஹ்வே… நீதான் இவருக்கு நல்லறிவை வழங்கனும்’ என துஆக் கேட்டு வந்தாள்.

சாலிஹ் பணிபுரியும் பருத்தி மில் ஊருக்கு வெளியே ஒரு கி.மீ தள்ளி இருந்தது. காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலை. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. காலை எட்டு மணிக்கு ஒரு முறையும், மாலை ஆறு மணிக்கு ஒரு முறையும் மில்லில் சங்கு ஒலிக்கும். அந்தச் சங்கொலி கேட்டு சுற்று வட்டாரத்திலிருந்து வேலைக்கு வரும் ஆட்கள் வேகமாய்ப் பறந்து வருவர். அன்று சற்றுத் தாமதமாகிவிட்டது. சாலிஹ் பரபரத்துக் கொண்டிருந்தான். சீக்கிரம் டிபன் பாக்ஸைக் கொடு. சங்கு ஊதிடப் போறாங்க… என மனைவியை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான்.

இதோ ஆச்சுங்க… என்றவாறு டிபன் பாக்ஸைக் கொண்டு வந்து கொடுத்தாள் மைமூனா. அதை வாங்கிக்கொண்டு பறந்தான் சாலிஹ்.

பார்த்து பத்திரமாப் போயிட்டு வாங்க… வாசல் வரை வந்து கணவனை வழியனுப்பி வைத்தாள். சாலிஹ் பாதி வழியிலிருந்த போதே சங்கு ஊதப்பட்டது. வேகமாய் சைக்கிளை மிதித்தான். கழுத்துப் பட்டையில் வியர்வைப் பிசுபிசுப்பு.

சற்றுத் தொலைவில் சாலையோரம் நின்றிருந்தான் கிருஷ்ணகுமார் – சக ஊழியன். அவனைக் கண்ட சாலிஹ், அந்த அவசரத்திலும் சைக்கிள் வேகத்தைக் குறைத்தான். அவனை நெருங்கி நிறுத்தினான். ‘சாலிஹ்… நல்ல நேரத்துல வந்தே. என் சைக்கிள் பங்க்சர் ஆயிட்டுது. சைக்கிள் ஷாப்ல விட்டிருக்கேன்’ என்றான் கிருஷ்ணகுமார்.

“சீக்கிரம் ஏறு… சங்கு ஊதிட்டான் பாரு… கேட்டைச் சாத்திட்டாங்கன்னா அப்புறம் செக்யூரிட்டிக் கிட்டச் சொல்லி மேனேஜரோட பெர்மிஷன் வாங்கி உள்ளே போக வேண்டி வரும். கொடுமை.”

கிருஷ்ணகுமார் பின்னால் தொற்றிக் கொள்ள ‘தம்’ பிடித்துச் சைக்கிளை மிதித்தான் சாலிஹ்.

அப்பாடா… எப்படியோ அடித்து, பிடித்து ஆலையை அடைந்துவிட்டார்கள்.

இவர்கள் உள்ளே நுழையவும் மில்லின் பிரதான வாயில் அடைக்கப்படவும் சரியாக இருந்தது.

அன்றிரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு வெளித் திண்ணையில் வந்தமர்ந்தான் சாலிஹ்.

மைமூனாவும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வந்து அவனருகில் அமர்ந்தாள்.

காலையில் நடந்த சம்பவத்தைச் சொன்னான் சாலிஹ்.

இனிமேல் பத்து நிமிஷம் முன்னால கிளம்பிடனும் இல்லேன்னா இன்னைக்குப் பட்ட பாடுதான்.

படு பயங்கரமப்பா. எங்கே கேட்டைச் சாத்திடுவாங்களோன்னு ஒரே டென்ஷனாப் போச்சு. அப்போது பத்து வயது மகள் முனீராவும் வந்து அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டாள்.

வீட்டுக் கணக்கு முடிச்சிட்டியா கண்ணு…?

ஓ.. முடிச்சிட்டேம்மா…

என் செல்லம்… மகளைக் கொஞ்சினாள் மைமூனா. அம்மா.. என்னடா செல்லம்…?

ஸ்கூல் பெல் அடிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னால வந்திடணும்னு டீச்சர் சொன்னாங்க.

இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிருச்சு.

அட, உனக்கும் இதே பிரச்சனையா? சரி சரி.. நாளையிலிருந்து நேரத்தோடு போகலாம். என்ற மைமூனா, கணவன் பக்கம் திரும்பினாள்.

ஏங்க… பள்ளிக்கூடத்துல எதுக்கு பெல் அடிக்குறாங்க? என்று கேட்டாள்.

இதென்ன கேள்வி? பசங்க எல்லோரும் சரியான நேரத்துக்கு வரணுங்கறதுக்குத்தான் என்றான் சாலிஹ்.

கரெக்ட். உங்க மில்லுல எதுக்கு சங்கு ஊதறாங்க?

இப்போது இலேசாய் எரிச்சலடைந்தான் சாலிஹ்

என்ன நீ? சின்னப் புள்ளையாட்டம் கேக்கறே?

அட, சொல்லுங்கன்னா..!

வேலை ஆரம்பிக்கப் போறதைத்தான் அப்படி ஒலி எழுப்பி அறிவிக்கிறாங்க. அதைக் கேட்டுப் பணியாளருங்க வேகமாய் வந்து சரியான நேரத்துல ஆஜராகத்தான் அந்த அறிவிப்பு – வெறுப்புடன் சொன்னான்.

அதே போலத்தாங்க பாங்கோசையும் அதைக் கேட்டுப் பள்ளிவாசலுக்குச் சரியான சமயத்தில் வந்து தொழுகையில் கலந்து கொள்வதற்காகத்தான் அந்த அறிவிப்பு. இம்மையில் நாம் ஒரு குறையுமின்றி வாழணும்னா நமக்குன்னு ஒரு வேலை இருக்கனும். அந்த வேலைக்கு நாம் சரியான சமயத்துல ஆஜரானால்தான் சம்பளமும் ஒழுங்காகக் கிடைக்கும். அதுக்குப் பயந்துதான் நீங்க அரக்கப் பறக்க ஓடிப் போறீங்க. ஆனா அதே சமயம் மறுமையில் இறைவன் கேட்கப் போகும் கேள்விகளுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க?

துன்யாவில் கடமை தவறாத நீங்க, தீனில் தவறலாமா? அல்லாஹு தாலா நமக்கு ஆக்கி வைத்த கடமைகளிலிருந்து நாம் தவறலாமா?

சடாரென அந்த அப்பட்டமான உண்மை உறைத்தது சாலிஹுக்கு.

மிகச் சாதாரண உதாரணங்களைக் கொண்டு அவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாய் உணர்த்திய மைமூனாவை ஆச்சரியம் பொங்கப் பார்த்தான் சாலிஹ்.

அப்போது இஷாத் தொழுகைக்கான பாங்கு கணீரென ஒலித்தது பக்கத்துப் பள்ளிவாசலிலிருந்து.

உள்ளே சென்று சட்டை, தொப்பியை அணிந்துகொண்டு தெருவில் இறங்கி, பள்ளிவாசலை நோக்கி நடந்த கணவனைக்கண்டு சந்தோஷமாய் இறைவனுக்கு நன்றி செலுத்த எழுந்தாள் மைமூனா.

 

 

( இனிய திசைகள் – அக்டோபர் 2015 இதழிலிருந்து

 

Tags: 

Leave a Reply