ஒளிரும் மரங்கள்

 

K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,

 

ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது தான் நினைவுக்கு வரும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன? தைவான் நாட்டு விஞ்ஞானிகள் குழுவினர் வேறுவிதமாக சிந்தித்தனர். தெரு விளக்குகளுக்குப் பதிலாக சாலையோர மரங்களே வெளிச்சம் தந்தால் எப்படியிருக்கும்? இதோ ! “ஒளிரும் மரங்கள்” உருவாகி விட்டன.

தைவான் நாட்டின் பயன்பாடு அறிவியல் ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானி டாக்டர் யென் – சூன் –சூ தலைமையிலான குழு இரவில் ஒளிரும் மரங்களை உருவாக்கியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அறிவியல் அமைப்பான “ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி” இக்கண்டுபிடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளது. தங்கநிற நானோ துகள்கள் பற்றிய ஆராய்ச்சியில் இக்குழுவினர் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது என்று ஆராய்ச்சிக் குழுவினர் வியப்போடு கூறுகின்றனர்.

பகோபா கரோலினியானா எனும் அறிவியல் பெயர் கொண்ட தாவரத்தின் இலைகளில் தங்க நிற நானோ துகள்களைத் தடவிய போது சிவப்பு நிறத்தில் அம்மரத்தின் இலைகள் ஒளிர்வதைக் குழுவினர் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இக்கண்டுபிடிப்பின் மூலம் இனி மரங்களையே தெரு விளக்குகளாகப் பயன்படுத்த முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். இதனால் தெரு விளக்குகளுக்கு செலவழியும் மின்சாரம் பெருமளவில் சேமிக்கப்படும். சுற்றுச்சூழலில் இருக்கும் கரியமில வாயுவின் அளவு காற்று மண்டலத்தில் அதிகரிக்கும் போது “பசுமை இல்ல விளைவு” எனப்படும் புவி வெப்பமயமாதல் நிகழ்கிறது. எனவே இக்கண்டுபிடிப்பு சுற்றுசூழல் தூய்மையாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது (LED) விளக்குகள் (Light Emiting Diode) பயன்பாட்டில் இருக்கின்றன. இவ்விளக்குகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாஸ்பர் தூள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒளிரும் மரங்களில் இவ்வாறான தீங்குகள் எதுவும் இல்லை. மேலும் விளக்குகளை விட அதிக ஒளி உமிழும் மரங்களை உருவாக்குதலில் தற்போது இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அடுத்த கட்ட ஆய்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பகோபா கரோலினியானா தாவரம் மட்டுமின்றி வேறு எந்த வகைத் தாவரத்தையும் ஒளிரும் மரங்களாக மாற்றமுடியும். ஒவ்வொரு தாவரத்தின் இலைகளில் ‘குளோரோஃபில்’ எனப்படும். பச்சைய நிறமிகள் உள்ளன. இவைதான் ஒளிச்சேர்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றன. தங்க நிற நானோ துகள்களை இலைகளில் தடவும்போது, அவை இந்த குளோரோஃபில்களைத் தூண்டி சிவப்பு நிறத்தை உமிழச் செய்கின்றன. எனவே பச்சையம் உள்ள அனைத்து தாவரங்களையும் ஒளிர வைக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இனி எதிர்காலத்தில் ஒளிரும் மரங்களே இரவு நேரச் சாலைகளை அலங்கரிக்கப் போகின்றன.

நம் நாட்டில் முதன் முதலாக புகையைக் கக்கிக் கொண்டு பெரிய விளக்கோடு புகைவண்டி வருகை தந்தபோது கொள்ளி வாய் பிசாசு வருதுப்போல் என்று அலறி ஓடி ஒளிந்தனர் கிராமவாசிகள். தற்போது மரங்கள் ஒளிர்வதைப் பார்த்து என்ன செய்யப் போகிறார்களோ? இருக்கின்ற மரத்தை வெட்டிக் கொண்டும், அரச மரத்தைச் சுற்றிக் கொண்டும், சுடுகாட்டு மரத்தில் ஆணியடித்துக் கொண்டும் மரத்தடிக்கதைகள் பேசிக் கொண்டும் நேரம் போக்கும் நம்மவர்கள் சிந்திப்பார்களா?

 

நன்றி :

முகவை முரசு

ஜனவரி 28 – பிப்ரவரி 3, 2011

Tags: , ,

Leave a Reply