ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழும் ஏர்வாடி தர்கா !

ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழும் ஏர்வாடி தர்கா !

 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து 8.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையது இபுராஹிம் ஷஹீதுவலி என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதீனா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த பாதுஷா நாயகம் கி,பி. 1200 இல் இறைவனடி சேர்ந்து இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கின்றனர்.

ஞானப்பாதையில் உதித்த பாதுஷா நாயகம் என்று போற்றப்படும் அல்குத்புல் அக்தாப் சுல்த்தான் சையது இபுராஹிம் கி.பி.1163 ஆம் ஆண்டு மத்தியில் இந்தியா வந்து அவரது அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் செல்ல அழைத்தார்கள். பல்சந்த்மாலை நூல்களிலும், பைனுல் மஜீது போன்ற் அரபி கிரந்தங்களிலும் ஷஹாதத் நாமா என்ற பார்சி கிரந்தங்களிலும் ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் ஆட்சிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மன்னரின் குறை தீர்த்த தர்கா :

ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமார சுவாமி ரகுநாத சேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்து விஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்து விஜயனின் நோய் முற்றிலுமாக நீங்கியது.

தர்காவின் மகிமையை உணர்ந்து தனது மருமகனான மன்னர் சேதுபதியிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மன்னரும் தனது மனைவிக்கு ஆண் வாரிசு தேவை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதி முன்பாக முறையிட்ட, மறு ஆண்டே அழகிய ஆண் வாரிசு பிறந்தது. இதற்கு காணிக்கையாக ராமநாதபுரம் மன்னர் நிலங்களை தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அனைத்து சமூக மக்களும் தர்காவுக்கு வந்து செல்கின்றனர். கேரள மாநிலத்திலிருந்து அதிகமானோர் இங்கு வருகை தருகின்றனர்.

மதநல்லிணக்க விழா :

ஆண்டு தோறும் பாதுஷா நாயகத்தின் நினைவு தினத்தை சந்தனக்கூடு எடுத்து ஒருமைப்பாட்டு விழாவாக கொண்டாடப்படுவது இதன் மற்றொரு சிறப்பம்சம். இவ்விழாவுக்கு சந்தனக்கூடு பல்வேறு சமூகத்தினரால் இன்றும் செய்து வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதேபோன்று, மாற்று மதத்தினரால் வழங்கப்படும் கடல் நீரால் தர்கா சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் சந்தனக்கூடு புறப்பட வழிகாட்டியாகவும் மாற்று மதத்தினர் உதவுகிறார்கள்.

யானைகள், குதிரைகள், பவனிவர, மேளதாள வாத்தியங்கள் முழங்கவும், வாண வேடிக்கைகளுடன் சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவை நோக்கி வருவது கண்கொள்ளக் காட்சியாகும். மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் சந்தனக்கூடு திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

சந்தனக்கூட்டில் வைத்துக் கொண்டு வரும் சந்தனச்செம்பு, பாத்திஹா ஓதிய பின்னர் மகான் சுல்தான் சையது இபுராகிம் ஷஹீது வலியுல்லா சமாதியில் பூசப்படுகிறது.

இத்தர்காவின் மகத்துவத்தை காணவந்த பெங்களூரு துவாரகா வித்யானந்தா தீர்த்த சுவாமிகள் இங்குள்ள குறிப்பேட்டில் ‘இம்மண்ணில் பல மகான்கள் வாழ்ந்தாலும் இப்பகுதி பூலோக சொர்க்கமாக அருள்பாலிக்கிறது’ என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு தங்கி ஆராய்ச்சி மேற்கொண்ட வடமாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமி என்ற ஆராய்ச்சியாளர் தான் எழுதிய ‘செயிண்ட்ஸ் இன் சவுத்’ என்ற நூலில் மகான்கள் வாழ்ந்த பகுதியாதலால் ஏர்வாடியில் இறைவனின் அருள் நிரம்பி இருப்பதாகவும் இங்கு வருவோர் குறைகள் நீங்கி நிம்மதியடைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொடிமரம் :

தர்காவிற்கு முன்புறத்தில் காட்சியளிக்கும் மேடையை கொடிமேடை என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் துல்கஅதா மாதம் பிறை 10 இல் கொடியேற்று விழா நடைபெறுகிறது. அப்போது 70 அடி உயரம் கொண்ட கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

இக்கொடிமரம் 3 டன் எடை கொண்டது. கொடி இறக்கம் நிறைவடைந்ததும் மரம் கழற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஏர்வாடி தர்கா வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் அரபு நாட்டில் உள்ள பள்ளிவாசலை போன்ற தோற்றத்துடன் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தும் வகையில் இடவசதி உள்ளது. இங்கு படிக்கட்டு வசதியுடன் 135 அடி உயரத்தில் மினரா (கோபுரம்) அமைக்கப்பட்டுள்ளது.

-சி.வ.சு. ஜெகஜோதி.

( தினமணி – ஈகைத் திருநாள் மலர் 2015 )

Tags: ,

Leave a Reply