ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

செல்லாதே எனச்
சொல்லத் தெரியாமல்
சொல்லாமல் சொல்கின்றாய்
சொட்டுகின்ற கண்ணீரால்

நீ,
கரைகின்ற காரணம்
நான்தானென்று
நானறிந்தேதான்

கட்டியணைக்கின்றேன்
கண்ணீரைத் துடைக்கின்றேன்
கதறும் மனதினை மேலும்
கனக்க வைக்கின்றேன்

உதிருகின்ற உன் கண்ணீர்-என்
உள்ளத்ததை உருக்கும்போது
ஆறுதலாய் அணைப்பதைத் தவிர
அன்னமேயெனக்கு
வேறு எதுவும் தோன்றவில்லை

காதல்பூ வாடி நிற்க
கடல் கடக்க துணிகின்றேன்
காகிதக்காசை கைப்பற்ற
கண்மணியே உனைபிரிந்து
கானகம் செல்லப் போகின்றேன்

கரையாதே காதல் சகியே!
காற்றில் தூது விடுகின்றேன்- அது
காதோடு காதல் சொல்லும்-சிலநேரம்
கஷ்டமும் சேர்த்து சொல்லும்

காதலும் கஷ்டமும்
கலப்பதுதான் வாழ்க்கையென்று
காலந்தொட்டு காலமாக
கடந்து வரும் பாதையன்றோ!

நமக்கு மட்டுமென்ன
விதிவிலக்கா!
நம்மை விட்டுமது
விலகி நிற்க!

எத்தனை சொன்னாலும்
ஏனோ தெரியவில்லை 
எதையோ எதிர்ப்பார்கிறது
ஏக்கத்தோடு என்மனம்

சொல்லி விடடி செம்பூவே
செல்லாதே யென்ற ஒருவார்த்தை
தேசம்விட்டு தேசம்தாண்டி
செத்து செத்து பிழைப்புக்கும் பிழைப்பு
நமக்கு வேண்டாமென்று!..

அன்புடன் மலிக்கா
துபை
http://niroodai.blogspot.com

Tags: ,

Leave a Reply