உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

 

         (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)

 

ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த மனிதன் உலகம் உள்ளளவும் உலகினர் உள்ளங்களிலே சாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பான் ! இது நியதி ! உறுதி !!

இந்தியப் பூமியைக் கண்டெடுத்த கொலம்பஸ்; விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள்; இமயமலைச் சிகரத்தில் முதன் முதலில் கொடி நாட்டிய டென்சிங், ஹிலரி; சந்திர மண்ணில் முதலில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் இப்படிப்பட்ட சாதனையாளர்களை உலக வரலாறு இன்னும் நெஞ்சில் நினைத்துக் கொண்டு தான் இருக்கிறது ! ஏன்? இவர்கள் சாதனை வீரர்கள் ! சரித்திரம் படைத்தவர்கள் !! உலக வரலாற்றில் சாகா வரம் பெற்றவர்கள் !!!

இதுபோல ஒவ்வொரு துறையிலும் தனித்தன்மை வாய்ந்த கொள்கையுடன் தன்னோடு வாழும் மனித சமுதாயத்துடன் போராடி – அதே மனித சமுதாயத்திற்கு மேம்பாட்டையும் உயர் வாழ்வையும் உருவாக்கித் தந்த தியாக மேதைகளும் உலகில் வாழ்ந்தார்கள் !

சிந்தனை அற்றிருந்த மனிதர்களுக்கு மத்தியில் சிந்தனை வித்துக்களை இதயங்களில் தூவி, மண்டிக்கிடந்த மடமைகளை ஒழித்து, மாண்புமிகு சிந்தனை ததும்பும் வாழ்வை மலரச் செய்த பிளாட்டோ, ரூஷோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிவு மேதைகள் இன்னும் நம் இதயங்களில் வாழவில்லையா?

இது போன்ற விஞ்ஞானத்திற்கும், அஞ்ஞானத்திற்கும் இடைப்பட்ட ஒரு மெஞ்ஞான வாழ்வை மனித சமுதாயத்தில் மலரச் செய்து மனித நெறியிலிருந்து விலகி வாழ்ந்த மக்களை மனிதப் புனிதர்களாக வாழச் செய்த மேதைகளும் உலக வரலாற்றில் உண்டு ! அவர்களின் தத்துவ முத்துக்களையும், மேலான வழிகாட்டல்களையும் இன்னும் நாம் மறப்பதற்கில்லை ! மறக்க முடியாது !

இப்படிப்பட்ட உலகம் புகழும் உத்தமர்களிலேயே உலக வரலாற்றில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இன்னும் மின்னிக் கொண்டிருக்கும் மாபெரும் மேதையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவர் தான் இறை தூதர் முஹம்மது (ஸல்) ! நபிகள் நாயகம் அவர்கள் !!

அவர்கள் தொட்டுக் காட்டாத துறையே கிடையாது எனும் அளவில் அவர்களின் வாழ்க்கை விரிந்த, பரந்த, உயர்ந்த, ஆழமான வழிகாட்டியாக அமைந்து விட்டது. எந்தத் துறைக்கும் அவர் ஒரு உதாரணமாக விளங்குகிறார்.

விஞ்ஞானம், கல்வி அறிவு, தொழில் நுட்பம், குடும்பவியல், போர்முனை, பக்தி மார்க்கம், பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் மேன்மை, மனித நேயம் …. இப்படி மனிதன் தொட்டு வாழும் எல்லா நிலைகளிலும் அவர்களின் வழிகாட்டல். உபதேசம், தனிப்பாங்கு அமைத்து இருப்பதை அவரின் சரித்திரத்தை அறிந்தோர் அறிவர் ! அலை ஒவ்வொன்றுக்கும் உதாரணங்காட்டி உலக மொழிகள் அனைத்திலும் கோடான கோடி நூற்கள் வெளியாகி விட்டன !

ஒரு நாட்டை, ஒரு இனத்தை, ஒரு மொழியைச் சொந்தமாகப் பெற்றுப் பிறந்திருந்தாலும் அவரின் வாழ்க்கை நாடு, மொழி, இன பேதமற்ற முறையில் உலகமனைத்திற்கும் பொதுவுடைமையாகிவிட்டது.

முஹம்மது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு மட்டும் வழிகாட்டி அல்ல ! அவர் உலகெலாம் உய்விக்க வந்த உத்தமத் தூதர் ! அவர் தந்த     குர்ஆன் வேதம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமல்ல ! அது உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டத் தந்த இறைமறை ! அவர் தந்த மார்க்கம் முஃமின்களுக்கு மட்டும் உரியது அல்ல ! அது உலகிற்கே வாழ வழி தந்த பாதை !

முஹம்மது நபி முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்றிருந்தால் அவரின் சரித்திரம் இன்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் நின்றிருக்கும் ! அவர் ஒரு உலக வழிகாட்டி என்ற நிலையில் வாழ்ந்ததால் தான் இன்று உலகெலாம் போற்றும் உயர் நிலையில் அவர் சரித்திரம் வாழ்த்தப்படுகிறது ! வழி நடத்தப்படுகிறது !

எந்த நாட்டவரும், எந்த வகுப்பினரும், எந்த மொழியினரும் அவர் வாழ்வைப் பின்பற்றி வாழ முடியும் என்ற நிலையில் முஹம்மது நபியவர்கள் வாழ்க்கை எளிமை நிறைந்ததாக இருக்கிறது !

அவர் வழி நடந்த எந்தப் பாதையிலும் மனிதன் தொடர்ந்து செல்ல முடியும் ! அதற்கு இன்றைய அரசியலோ, அரசாங்கமோ கூட தடை போட முடியாது !

ஏனென்றால் அவர் தந்த பாதையால் எந்தக் குற்றங்களையும், குறைகளையும், பிழைகளையும், சிறு தவறுகளையும் கூட எவரும் கண்டதில்லை ! இது உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மை ! அவர் வாழ்வில் குறை காண முனைந்தோர் கூட அவரின் கொள்கை வழி வாழத் துணிந்து விட்ட சம்பவங்களைத் தான் பார்க்க முடிகிறது !

முஹம்மது நபியவர்களின் வாழ்க்கை இன்றும் ஆராயப்படுகிறது ; அலசப்படுகிறது ! சுனையில் ஊறி வரும் சுத்தமான நீரைப் போலத்தான் அவரின் வாழ்வில் தெளிவு கிடைக்கிறதே தவிர எங்குமே அதில் எவருமே கழிவு கண்டதில்லை !

எவருமே குறை கூற முடியாத, இழிவு காண முடியாத பொன் போன்ற மார்க்கத்தைத் தந்த காரணத்தால் தான் உலகின் எந்தப் பகுதியிலும் அவரின் வாழ்க்கை எதிர்க்கப்படவில்லை ! அவரின் வாழ்வுப் பாதையைத் தடை போட முடியவில்லை !

இன்று பல மேதைகள் அவரின் வழியில் சென்று வெற்றியின் உச்சிக்குச் சென்று விட்டார்கள் ! இன்று சாதித்து வரும் உலகச் சாதனைகளில் ஏதாவது ஒரு வழியில் உத்தம நபிகளின் வழிகாட்டலோ, அல்லது அவரின் அறிவு மொழியோ பின்னணியில் நிற்பதை ஆய்வாளர்கள் நன்கறிவர் !

ஏனென்றால் அவர் சுட்டிக் காட்டாத வழிமுறையே ஏதுமில்லை எனும் அளவில் அவரின் வழிகாட்டல் எல்லாத் துறையிலும் நுழைந்திருந்திருக்கிறது ! அது வெற்றி தரும் என்பதில் சந்தேகமே இல்லை !

உலகம் பிறந்தது முதல் உலகம் இறக்கும் வரைக்கும் அக்கால, இக்கால, பிற்கால வாழ்க்கை நெறிகளை, உலக உண்மைகளை அவர் திறந்த புத்தகமாக வடிவமைத்துக் கொடுத்து விட்டார்.

இன்று வரை மட்டுமல்ல என்றுமே அவர் வாழ்க்கை இரவாச் சரித்திரமாக – அழியாத – வரலாறாக – உண்மை வாழ்க்கையாகவே இருக்கும் ! ஏனெனில் அவர் வாழ்வில் உண்மையைத் தவிர வேறில்லை !

 

( மலேசியாவின் நம்பிக்கை மாத இதழில் 1999 ஆம் ஆண்டு மீலாது மலரில் வெளியிடப்பட்டது )

Tags: , ,

Leave a Reply