உறவுக்கு கைக்கொடுப்போம் !

-சேவைச் செம்மல் கவிஞர் சீர்காழி இறையன்பனார்

மனித சமுதாயம் மேம்பட்டதாகும். இறைவன் மனிதர்களுக்குத்தான் ஆறறிவும் சிந்திக்கும் ஆற்றலையும் ஒரு அருட்கொடையாக கொடுத்திருக்கிறான். அதை மனிதன் பயன்படுத்துவதில் பழுதுபட்ட ஓவியமாய் விழுதற்ற ஆலமரமாய் மாறி விடுகிறான்! அதனால் உன்னதமான உறவும், நட்பும், பொறாமையாலும், பேராசையாலும் விரிசல் ஏற்பட்டு மலையையே பிளந்து விடுகிறது. உறவு வேம்பாய் விடுகிறது. உறவு என்ற உள்ளார்ந்த வட்டத்தில் மன முரண்பாடுகள், புகைச்சல்கள், நமைச்சல்கள், வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள் வரம்பு மீறிய பகையாக புகைய ஆரம்பித்து விடுகிறது. இதனால் உறவுப்பாலம் உள்ளத்தின் பாசம் நகர்ந்து தகர்ந்து தளர்ந்து போய் உடைந்து விடுகிறது! முறிந்தும் விடுகிறது !

வாழ்வில் சஞ்சலமும், சலனங்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமைக்கு – உறவுக்கு வேட்டு வைக்கிறது. ஒரு குடம் பால் ஒரு துளி விஷத்தால் கெட்டுப் போய் விடுகிறது. அதுபோல் கோபம் என்பது மனித உறவையும், மகிழ்ச்சியையும் கானல் நீராக்கி பாழ்படுத்தி விடுகிறது. இஸ்லாம் என்றாலே சாந்தி, சமாதானம் என்று பொருள். அந்த சாந்தியை வாழ்வில் தொலைத்து விடுகிறோம். வெளிச்சத்தில் தொலைத்த சாந்தியை இருட்டில் தேடுகிறோம். குருடன் சூரியனைப் பார்க்க ஆசைப்பட்டதுபோல் ! வெள்ளாமைக்கு உழுது விதை விதைக்காமல் தண்ணீர் பாய்ச்சாமல் விளைச்சலைத் தேடுகிறோம் !

மகனுக்கு பெண் எடுக்கும்போது மாமியார் மருமகளைத் தன் மகளாக எண்ணி பாதுகாப்பேன் என்று சொல்லி திருமணம் முடிந்ததும் மாமியார்கள் தன் கைவரிசையை காட்டுவதால் மருமகள்கள் கண்ணீரில் நனைகிறார்கள். கவலையால் அழுகிறார்கள். மருமகளிடம் பொன்னைக் கேட்டு வாங்கியவர்கள் (வரதட்சணை தாசர்கள்) புன்னகையை பார்த்து மகிழ விரும்பாது வெறுக்கிறார்கள் – வேதனைப்படுத்துகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயமாகும் !

‘எவன் நன்மை செய்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் தீமை (அது) அவனுக்கு கேடாகும். பின்னர் உங்கள் இறைவன் பக்கமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (45:15) என்று திருக்குர்ஆன் கூறுவதை ஆண்களும், பெண்களும் கணவன்மார்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இறைவன் மனிதனை நன்மையின் பக்கம் சார்ந்து விடும்படி அழகாக தெளிவாக அறிவுறுத்துகிறான்.

யார் இறையச்சம் கொள்கிறார்களோ – திருக்குர்ஆனின் வேத வரிகளை வாழ்வில் நடைமுறைப்படுத்துகிறார்களோ யார் அழகிய முன்மாதிரியென அல்லாஹ்வால் பிரகடனப்படுத்தப்பட்ட அறிவுறுத்தப்பட்ட – நற்குணத்தின் தாயகமான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளை வாழ்க்கையின் உயரிய வழிமுறைகளை பின்பற்றி உள்ளத்தில் உறுதிகொண்டு வாழ்க்கைத் தடாகத்தில் வசந்த மலர்களாக பூத்து என்றென்றும் மணம் பரப்ப வேண்டும் ! நேசம் என்ற சொல்லால் நெஞ்சத்தை மகிழ வைக்க வேண்டும். தூய உள்ளங்கொண்டு துயர்களை களைந்தெறிய வேண்டும்! தொட்டெடுத்தால் ஊறுகின்ற கிணறுபோல தொல்லையுறும் மக்களின் துன்பம் போக்கி பொற்ற விழ்பூம் பொழிலில் பொன் அள்ளும் மலர்க்குழுவாய் மனிதர் நடுவில் வாழ்ந்திட வேண்டும்.

சஞ்சலங்கள் சலனங்கள் சண்டை சச்சரவுகள் நீங்க வேண்டுமென்றால் நன்மையின் பக்கம் நாட்டத்தைச் செலுத்த வேண்டும். தோட்டத்தின் மணம் மனதில் பூத்து பூரிக்க வேண்டும். குடும்பம் உறவுகளை வலுப்படுத்தவே வாழ்க்கை ஓடத்தின் துடுப்பாகும்! ஆபத்தைத் தடுப்பதாகும்! சீரார்ந்த சிந்தனையை சீர்தூக்கி வாழ்வு செம்மையாக அமைய உள்ளங்களை பதப்படுத்தப்பட வேண்டும் – பக்குவப்படுத்த வேண்டும். கல்பில் கசியும் கனிவு கஸ்தூரியாய் மணக்க முயற்சிக்க வேண்டும். முள்ளை அகற்றி ரோஜாவைப் பறிக்க வேண்டும். அதுபோல் தீமையை அகற்றி நலங்களின் பக்கம் சேர வேண்டும். அதுபோல் துன்பகடலில் விழுந்தவரைக் கைக்கொடுத்து காப்பாற்றி துயரத்திலிருந்து மீட்க வேண்டும். மனிதன் புனிதனாக மாற வேண்டும். மனித நேயத்தை மனதிற்கொள்ள வேண்டும். ‘யாம் பெற்ற இன்பம் இவ்வகையகம் பெறுக’ முயற்சி திருவினையாக்கும்’ – என்ற வைர வரிகள் வாழ்வின் நெறிகளை பரிணமிக்க வேண்டும்.

‘காற்றிலும் – கருவை வைத்தான் – கல்லிலும் ஈரம் வைத்தான் – சேற்றிலும் செந்தாமரை வைத்தான் அனைத்தையும் இறைவன் வாழவைத்தான் என்பதை அறிந்து வாழ்ந்தால் வீடும் நாடும் அமைதிப்பூங்காவாக விளங்கும்! தெளிந்த நீரோடையாக இலங்கும். வானின் நிலாவாக ஒளியை அள்ளி வழங்கும்! உள்ளமும் உறவும் ஒன்று சேரவும் நன்று வாழவும், கணவன் மனைவிகளிடையே அன்பு பரிமாறவும், மாமியார், மருமகள் மனம் மாறி மகிழ்வு மலரவும் புனிதமிக்க ரமலானின் அருளாலும் ஈத் பெருநாளின் சிறப்பாலும் உறவுக்குக் கைக் கொடுத்திட உள்ளத்திற்கு மலர்க் கொடுத்திட முயன்று தழைக்கும் இஸ்லாம் மூச்சாக, உழைக்கும் உணர்வுப் பேச்சாகத் திகழ்ந்திட வேண்டும் !

வித்தக வானத்தில் விரிந்த விண்மீன் தாரகைகள் வீதியெல்லாம் தெளித்தது போல் வளம் குவித்ததுபோல் நலம் நினைத்தது போல் ஈகைத் திருநாளை – ஈத் பெருநாளை மகரந்தம் தேன் கொட்டும் திருநாளாக போற்றுவோமாக ! வணங்கி வாழ வேண்டும் – வழங்கி வாழ வேண்டும் – பிறரோடு இணங்கி வாழ வேண்டும் என்ற அப்துஸ் ஸமதின் சொல்லோவியம் வாழ்வில் தீட்டும் காவியமாக மலர வேண்டும்! மகிழ வேண்டும் ! ஈத் முபாரக் !

 

நன்றி :

 

மணிச்சுடர்

ரமளான் சிறப்பு மலர் 2011 லிருந்து

Tags: , ,

Leave a Reply