உன்னால் முடியுமா தம்பி?

உன்னால் முடியுமா தம்பி?

(ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

 

2011 ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்புப் படி தமிழ் நாட்டின் ஜனத்தொகை 7,21,47,030 ஆகும். அதில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 42.5 லட்சமாகும். இது ஏழு சதவீதமாகும். இன்றய தமிழக சட்டசபை உறுப்பினர்கள் 234. அதில் முஸ்லிம் உறுப்பினர்கள் 5 தான் என்றால் வேதனையாக இல்லையா? குறைந்தது மக்கள் விகிதாசாரத்தின் படியாக ஏழாவது இருக்க வேண்டாமா? 2006ம் ஆண்டு 7 முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 2011ம் ஆண்டு 6 ஆக குறைந்து 20011ம் ஆண்டு கழுதை தேய்து கட்டெறும்பான கதையாக வெறும் 5 உறுப்பினர்களே உள்ளனர் என்று காணும் போது  வேதனையாக இல்லையா?

தமிழகத்தில் 80 ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாக்காளர்களுக்கு மேல் கொண்ட 22 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. அதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் தொகுதியில் மட்டும் 1 லட்சத்திற்கு 20ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் இன்றைய தேதி வரை அங்கு ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கூட வந்ததில்லை. அது மட்டுமல்ல ஒரு முஸ்லிம் கட்சிக்கூட வேட்பாளரை நியமிக்க வில்லையே அது ஏன்?

தமிழகத்தில் ஒரு லட்சம் முஸ்லிம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள தொகுதிகள் 30 ஆகும். அவை:

1) நன்னிலம் 2) கடலாடி 3) கோவை மேற்கு 4) மதுரை சென்ட்ரல் 5) திருச்சி 6) சேலம் 7) அரவாக்குறிச்சி 8) குடியாத்தம் 9) ராணிப்பேட்டை 10) ஆற்காட் 11) சென்னை துறைமுகம் 12) சேபாக்கம் 13) ஆயிரம் விளக்கு 14) திருவல்லிகேனி 15) எழும்பூர் 16) சென்னை பூங்கா நகர் 17) ராயபுரம் 18) திண்டுக்கல் 19) நத்தம் 20) பெரியகுளம் 21)  திருச்செந்தூர் 22) பாளையங்கோட்டை

இவை தவிர 60 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட தொகுதிகள் 30க்கு மேல் இருக்கும்.

அப்படி இருக்கும் போது ஏன் வெறும் 5 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் இன்றய சட்டசபையில் உள்ளன என்கிற சுய சிந்தனையில் ஈடு பட வேண்டாமா?

நமது சமுதாயம் மற்றும் சமுதாய இயக்கங்கள் பல பிரிவுகளாக துண்டாகி சிதறி நிற்பதினால் அரசியல் கட்சிகள் அதனை பயன் படுத்திக் கொண்டு பேருக்கு சில தொகுதிகளை ஒதுக்கி, ஒதுக்கிய தொகுதிகளிலும் அந்த கட்சி தலைவர்களே உள் குத்து வேளையில் இறங்கி முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்கின்றனர் என்று பல்வேறு உதாரணங்களை நீங்கள் தேர்தல் நேரத்தில் அறிந்திருப்பீர்கள். எப்படி ஆங்கிலேய கும்பனி அரசு பிரித்தாளும் கொள்கையினைக் கையாண்டு இந்தியாவில் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தார்களோ அதேபோன்று தான் இன்றய அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய இயக்கங்கள் பிரிந்ததால் இந்திய ஜனநாயகத்தில் 66 ஆண்டுகளாக முஸ்லிம்கள் மேல் ஏறி சவாரி செய்கின்றனர் தேர்தல் நேரத்தில். அதனால் முஸ்லிம்கள் அடைய வேண்டிய சமுதாய நன்மைகள், வேலைவாய்ப்புகள் பாதிக்கப் படுகின்றன என்பதினை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. தேர்தல் நேரத்தில் முஸ்லிம்கள் பகுதியில் குல்லாய் அணிந்தும், பள்ளிவாசல் தோறும் ஜும்மா நேரத்தில் தொப்பி அணிந்து ஓட்டு கேட்பதும் நோன்பு நேரத்தில் குல்லாய் அணிந்து இஃப்த்தாரில் கலந்து கொள்வதும் தேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் தலையில் ஆளும் கட்சியினர் குல்லாய் போடுவதும் வேடிக்கையாக இல்லையா அது ஒரு தொடர் கதையாக உங்களுக்குத் தெரியவில்லையா?

 

முஸ்லிம் சமுதாயம் இனிமேலும் வலுவிழந்த சமுதாயமானால் பல்வேறு இடற்பாடுகளை இன்றைய காலக் கட்டத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டாமா? ஏன் நம்மிடையே படித்த, பண்புள்ள, ஆற்றல் மிக்க இளைஞர் படை இல்லையா? இன்றைய ஆய்வின் படி முஸ்லிகளில் இளைஞர்கள்  அதிகம் என்று கூறுகின்றது. ஆகவே வரும் காலங்களில் முஸ்லிம் சமுதாயம் பிறருக்கு அடிமையாக இருப்பதனை விட்டுவிட்டு எழுச்சி பெற்று தமிழக சட்டமன்றத்தில் கூடுதலான எண்ணிக்கை பெற்று சமுதாய முன்னேற்றத்திற்கு  பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்!

Tags: 

Leave a Reply