உனக்கும் ஓர் இடம் உண்டு — கவி. முருக பாரதி

உனக்கும் ஓர் இடம் உண்டு – 1

— கவி. முருக பாரதி

 

உள்ளரங்கில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வு அது.

பங்கேற்றிருந்தவர்களை 1,2,3,….., என்று வரிசையாக எண்கள் சொல்லச் சொன்னார் பயிற்றுநர். மொத்தம் 52 பேர் இருந்தார்கள்.

“நான் ஸ்டார்ட் என்று சொன்ன பிறகு, 1 நிமிடம் மட்டுமே உங்களுக்கு டைம். அதற்குள், நீங்கள் தற்போது இருக்கும் இருக்கையில் இருந்து எழுந்து, உங்கள் எண்ணுடன் 6-ஐக் கூட்டினால் வரும் எண் சொன்ன நபரை சந்தித்து, கை குலுக்கிவிட்டு, அவரிடம், “உனக்காக நான்; எனக்காக நீ” என்று சொல்லிவிட்டு, அவருடைய இருக்கையில் அமர வேண்டும். 47, 48,49,50,51 மற்றும் 52 எண்களை சொன்னவர்கள், முறையே 1,2,3,4,5 மற்றும் 6 எண்களை சொன்னவர்களின்  இருக்கையில் அமர வேண்டும். விதிகள் புரிந்ததா..? விளையாட்டைத் தொடங்கலாமா..?”

“ஸ்டார்ட்” – என்று அவர் சொன்ன நொடியிலேயே அனைவரும் விரைவாக எழுந்து ஓடினார்கள். தள்ளுமுள்ளுகள்… இடிபாடுகள்… குளறுபடிகள்… இருக்கை நகர்த்தல்கள்… என அரங்கம் பரபரப்பானது. 60-ஆவது நொடியில் “ஸ்டாப்” என்றார் பயிற்றுநர். அனைவரும் அமர்ந்து அமைதியாக, மேலும் பல நொடிகள் ஆனது.

பங்கேற்றவர்கள் சொன்ன எண்ணையும், தற்போது அமர்ந்து இருக்கும் இருக்கை எண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்தார் பயிற்றுநர். சிலரே சரியாக அமர்ந்து இருந்தார்கள். காரணம் எளிமையானது. 1 என சொன்னவர், 7-ஆம் எண்ணுடையவரைத் தேடித் போனால், அவரோ 13-ஆம் எண்ணுடையவரைத் தேடி நகர்ந்திருப்பார். இப்படியே அனைவரும், முதலில் இடம் பிடிப்பதற்காக ஓடிக் கொண்டே இருந்தார்கள்.

 

உள்ளரங்கில் ஓடியவர்களை விடுங்கள்..! உங்கள் உள்ள அரங்கின் உள்ளே பாருங்கள்..!

ஒவ்வொரு நாளும், ஏதோ ஓர் இடத்தைப் பிடிக்க, பெரும்பாலோனோர் ஓடிக் கொண்டே இருக்கிறீர்கள். எப்படியாவது நீங்கள் விரும்பும் அல்லது உங்களுக்குத் தேவையான இடத்தைப் பிடிக்கப் போராடிக் கொண்டே இருக்கிறீர்கள்.

எல்.கே.ஜி. அட்மிஷனில் தொடங்கி, எம்.எல்.ஏ. மனுத்தாக்கல் வரை, இடம் பிடிப்பதற்குத்தான் எத்தனை தயாரிப்புகள், திட்டங்கள்..?

பிறக்கும் பிரசவ அறை முதல், இறந்தபின் புதைக்கும் இடம் வரை, இடத்தைப் பிடிப்பதற்குத்தான் எத்தனை விசாரிப்புகள், கட்டங்கள்..?

 

காலையில் பேருந்தில் தொடங்கி, இரவு உணவகம் வரை, இடம் பிடிப்பதற்குத்தான் எத்தனை தந்திரங்கள், முந்துதல்கள்..?

பக்கத்துப் பிளாட் முதல், சொர்க்கத்துப் பதவி வரை, இடம் பிடிக்கத்தான் எத்தனை மந்திரங்கள், உந்துதல்கள்..?

 

இருக்கும் இடம், பணியாற்றும் இடம் மட்டுமல்லாது, இதயத்தில் இடம் பிடிக்கவும், இங்கே ஏகப்பட்ட போட்டி.

 

ஒரு படத்தில், ஏராளமான பேர் வேகமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். ஒருவரைப் பிடித்து “எங்கே ஓடுற?” என்று கேட்டதும், அவர் சொல்வார்… “யாருக்குத் தெரியும்..? எல்லோரும் ஓடுறாங்க… நானும் ஓடுறேன்!” என்று. இப்படித்தான் எங்கே ஓடுகிறோம், ஏன் ஓடுகிறோம் என்றெல்லாம் சிந்திக்காமல் இடம் பிடிக்க ஓடுகிறோம்.

 

மனிதர்கள் மட்டுமா..? விலங்குகள், பறவைகள், … அவ்வளவு ஏன்..? மரங்கள் கூட இடம் பிடிக்கப் போராடிக் கொண்டே இருக்கின்றன.

 

மரங்கள் ஏன் பழுக்கின்றன..? சிந்தித்திருக்கிறீர்களா..? மனிதர்களும், மற்ற உயிர்களும் உண்பதற்காகவா..? இல்லை உறவுகளே..!

தன் வாரிசுகளுக்கு இடம் பிடிப்பதற்காகத்தான்..! ஆச்சரியமாக இருக்கிறதா..? உண்மை அதுதான். ஒரு மரம், தன் விதைகளை நேரடியாகக் கொடுத்து, மற்ற இடங்களில் தூவச் சொன்னால், நாம் செய்வோமா..? அதுவே, விதைகளைக் கொண்ட கனியாகக் கொடுத்தால்… பழத்தை உண்டுவிட்டு, கொட்டையை / விதையைக் கண்ட இடத்திலும் துப்புவோம் இல்லையா..? அங்கிருந்து, தாய் மரத்தின் வாரிசுகள் வளருமில்லையா..?

 

டார்வினின் பரிணாமக் கோட்பாட்டில், இதைத்தான் “வலுவுள்ளவை வாழும்” (Survival of the fittest) என்கிறார்கள்.

 

அப்படி என்றால், நாங்கள் இடம் பிடிக்க ஓடுவது சரிதானே என்கிறீர்களா..? சரிதான்… ஆனாலும் சரியல்ல..!

 

ஸ்..ஸ்..ஸ்…! இப்பவே கண்ணைக் கட்டுதா..? கசக்கி விட்டுக் கொண்டு, கவனியுங்கள்.

 

முதலில், நீங்கள் எந்த இடத்தை அடைய வேண்டும்..? கீழா.. சமமா.. மேலா..? – முடிவு செய்யுங்கள்.

மேலான இடம்தானே என்று என்னைத் திருப்பிக் கேட்காதீர்கள்..? எது மேல் என்று மேலும் கேள்வி கேட்பேன். தராசின் தட்டுகளில், மேலே இருப்பதுதான் மதிப்புக் குறைந்தது. சிந்தியுங்கள்..!

 

முதல் இடமா..? இரண்டாம் இடமா..? ஏதோ ஓர் இடமா..? – எல்லோரும் எப்படி முதல் இடம் பிடிக்க முடியும்..? கிரிக்கெட்டில், எல்லோரும் ஒப்பனிங் இறங்குவேன் என்று அடம்பிடித்தால், அடுத்தடுத்து யார் பேட்டிங் செய்வது..? எப்போதும் முதல் இடத்திற்குத்தான் முதல் மரியாதை என்று உங்களிடம் யார் சொன்னது..? “நண்பன்” படத்தின் “விருமாண்டி சுந்தரமா”?

 

அந்த இடம், உங்களுக்கான இடம்தானா என்று சிந்தித்திருக்கிறீர்களா..? ஒரு ஜவுளிக் கடையில் ஏராளமான ஆடைகளை வைத்திருப்பார்கள். ஆனால், அவற்றில் எது உங்களுக்கான ஆடை..? – தேர்வு செய்யுங்கள்.

 

இப்படி நீங்கள் சிந்திக்க, தேர்ந்தெடுக்க, முடிவு செய்ய… இந்தத் தொடரில் வழி காட்டுகிறேன். கடந்த 14 ஆண்டுகளில் 1500-க்கும் அதிகமான பயிற்சி நிகழ்வுகளை அளித்துள்ளேன். 7 நூல்கள் எழுதியுள்ளேன். என் வாய்-மை மூலம், லட்சக் கணக்கானோருக்கு நல்வழி காட்டியுள்ளேன். நீங்களும் இன்னும் மகிழ்ச்சியாய், இன்னும் முன்னேற்றத்துடன் வாழ வேண்டும் என்று, உண்மையாய் மனதார விரும்புகிறேன். அதற்கு, என் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்துகிறேன்.

 

அடுத்தடுத்த பகுதிகளுக்குள் நுழைவதற்கு முன், உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுத்து விட விரும்புகிறேன்.

 

நீங்கள் யாராக இருந்தாலும், எந்தத் தகுதியோடு இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், உங்களுக்கு எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும்… நீங்கள் வாழ, இந்த உலகில் ஓர் இடம் உண்டு.., உறவுகளே..! நம்புங்கள்..!

 

ஒரே சூரியன்தான் என்று இருந்து விடாதீர்கள்..! பகல் போற்றும் பகலவனாக மட்டுமல்ல; இரவுகள் போற்றும் நிலவாகவும் இருக்கலாம்..! நிலவும் ஒன்றே ஒன்றுதானே என்று முடிவு செய்து விடாதீர்கள்..! கோடிக் கணக்கான நட்சத்திரங்களும், அதே வானில்தான் உள்ளன என்பதை மறவாதீர்கள்..!

 

புலிகள் வாழும் காட்டில்தானே, மான்களும் வாழ்கின்றன..? யானைகள் போன்ற பெரிய உருவங்களுடன்தானே, எறும்புகளும் வாழ்கின்றன..? உங்களாலும் வாழ முடியும்..! உனக்கும் ஓர் இடம் உண்டு..!

 

எல்லோரும் போட்டி போட்டுத்தான் வாழ வேண்டும் என்று கூட இல்லை. போட்டி இல்லாத இடங்களைக் கண்டடைய முடியும். மார்க்கெட்டிங்-ல் இதை, நீலக் கடல் உத்தி (Blue Ocean Strategy) என்கிறார்கள். அதாவது, இந்த உலகம் பரந்து விரிந்தது. இதில் வாய்ப்பே இல்லை என்று ஒரு நாளும் நொந்து விடாதீர்கள்..! ஏராளமான வாய்ப்புகளுடன் உள்ள ஏராளமான இடங்கள், இன்னும் கண்டறியப்படாமலே, உங்களுக்காகக் காத்திருக்கிறது..! அதைக் கண்டடைவோம்..!

 

இனிய நந்தவனத்தில், தொடர் எழுத, எனக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது அல்லவா..? நீங்களும், உங்களுக்குப் பிடித்த இடத்தைப் பிடிக்க முடியும்..! நம்பிக்கையோடு அடுத்த பகுதியை வாசிக்கக் காத்திருங்கள்..!

 

 

Tags: ,

Leave a Reply