உடலை பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் துபாயில் இருந்து சென்னை வந்து தற்கொலை செய்த தொழிலாளி

தாம்பரம்,

துபாயில் இருந்து சென்னை வந்து தற்கொலை செய்து கொண்டவர், ‘துபாயில் இறந்தால் உடலை பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் இங்கு வந்து தற்கொலை செய்கிறேன்’ என உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார்.

திருப்பதியை சேர்ந்தவர்

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் ராமச்சந்திர நாயுடு(வயது 42). இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ராமச்சந்திர நாயுடு, துபாயில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடிக்கடி நெஞ்சுலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை விமானம் மூலம் சென்னை வந்த ராமச்சந்திர நாயுடு, பல்லாவரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

எஸ்.எம்.எஸ். தகவல்

பின்னர் தனது வீட்டுக்கு செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அதில், ‘‘நான் துபாயில் இருந்து இந்தியா வந்துவிட்டேன். சென்னையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. உடல் நிலையும் சரியில்லை. தம்பி வாங்கிய கடன் தொல்லையால் எனக்கு தொந்தரவாக உள்ளது. துபாயில் நான் இறந்து விட்டால் எனது உடலை இந்தியா கொண்டு வரமுடியாது. உடலை பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் இந்தியா வந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று கூறியிருந்தார். அந்த எஸ்.எம்.எஸ்.சில் தான் தங்கி இருக்கும் விடுதி முகவரியையும் அனுப்பி இருந்தார். பின்னர் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டார்.

தூக்கில் பிணம்

ராமச்சந்திரநாயுடு அனுப்பிய எஸ்.எம்.எஸ்.சை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்ததால் அவர்கள் ஒரு காரில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு பல்லாவரம் வந்தனர். அந்த விடுதிக்கு சென்ற அவர்கள், ஊழியர்களிடம் விவரம் கூறினர்.

அப்போது ராமச்சந்திர நாயுடு தங்கியிருந்த அறைக்கு சென்றபோது அது உள்பக்கமாக பூட்டி இருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது அறையின் உள்ளே ராமச்சந்திர நாயுடு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமச்சந்திர நாயுடுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags: , , , , ,

Leave a Reply