ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1-இல் துவக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவும், நிறைவு விழாவில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமும் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் 10-ஆவது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 முதல் 12-ஆம் தேதி வரை, ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 230 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

புத்தகத் திருவிழாவை பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தொடங்கிவைக்கிறார்.

நாள்தோறும் சிறப்புரைகள்: ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கும் இலக்கிய நிகழ்ச்சியில் “தன்னம்பிக்கைத் தமிழ்’ என்னும் தலைப்பில் சுகி.சிவம் பேசுகிறார்.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலை 6 மணியளவில் கவிஞர் அப்துல் ரகுமானின் கவியரங்கம் நடைபெறும். 4-ஆம் தேதி மாலை 6 மணியளவில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாலை 6 மணியளவில் “இலக்கியத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் பேசுகிறார். ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் நடைபெறும்.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி “கசடறக் கற்க’ என்னும் தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசுகிறார். ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு “அறிவே கடவுள்’ என்னும் தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசுகிறார்.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு “மண் பயனுற வேண்டும்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் சிறப்புரை ஆற்றுகிறார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு “வாழ்க்கை ஒரு வானவில்’ என்னும் தலைப்பில் நடிகர் சிவகுமார் பேசுகிறார்.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு “கம்பன் என்றொரு மானுடம்’ என்னும் தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் பேசுகிறார். ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவு விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பங்கேற்கிறார்.

உலகின் பிற நாடுகளில் வசிக்கும் படைப்பாளர்களின் படைப்புகளை, ஈரோடு புத்தகத் திருவிழா ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் “உலகத் தமிழர் படைப்பரங்கம்’ அமைக்கப்பட உள்ளது. தமிழ் மொழி குறித்த ஆய்வு நூல்கள், வரலாற்று நூல்கள், கட்டுரைத் தொகுப்பு நூல்கள், அறிவியல் நூல்கள், நாவல், சிறுகதை, கவிதை நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், பயண அனுபவ நூல்கள், தாங்கள் வாழும் நாடு குறித்த நூல்கள் என அனைத்து வகை தமிழ் நூல்களும் இந்த அரங்கில் அறிமுகப்படுத்தப்படும். இந்த அரங்கு “தமிழ்வேள் கோ.சாரங்கபாணி நினைவு உலகத் தமிழர் படைப்பரங்கம்’ என அழைக்கப்படும் என்றார்.

Tags: , , ,

Leave a Reply