இளம் வயதில் உயர் பதவிகளை அடைய சிவில் சர்வீஸ் தேர்வு: ஆட்சியர் அறிவுறுத்தல்

 

காரைக்கால்: இளம் வயதில் உயர் பதவிகளை அடைய, சிவில் சர்வீஸ் போன்ற தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் முத்தம்மா அறிவுறுத்தியுள்ளார்.

12-வது பல்கலைக்கழக மானியக்குழு திட்டத்தின்படி, 2014-ஆம் ஆண்டுக்கான சிவில சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி முகாம், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் முத்தம்மா நேற்று தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் தமிழரசி தமிழ்மணி அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து, ஆட்சியர் முத்தம்மா பேசியதாவது:

“சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல் கட்டம் மற்றும் அடிப்படை பயிற்சிக்கு செல்ல குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரம் வரை செலவிடவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இங்கு முழுமையும் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு இந்த சிவில் சர்வீஸுக்கான சிறப்பு பயிற்சி முகாம் பல திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதால், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

காரைக்காலில் நடைபெற பயிற்சி முகாமில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,பணியிலுள்ள பல அதிகாரிகள் சிறந்த பயிற்சியை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவித பயிற்சியை வழங்குவதால் அனைத்து வகுப்புகளையும் மாணவர்கள் தவறாது கலந்துகொண்டு பயிற்சி பெறவேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தம்மை தயார்படுத்திகொண்டால், நாட்டில் நடக்கும் பல்வேறு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை மிக எளிதாக எதிர்கொள்ளமுடியும். முதலில் நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டும். தாழ்வு மனப்பான்மையை தூரஎறிந்துவிட்டு கடின உழைப்பை தரவேண்டும். அனைத்தையும் கற்கவேண்டும் என்ற வெறி கூடுதலாக இருக்கவேண்டும்.

தற்போது ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ் முடித்தோர் 30 வயதுக்குள் மாவட்ட ஆட்சியராகவும், போலிஸ் அதிகாரியாகவும் வரமுடிகிறது. 35 முதல் 40 வயதுக்குள் நல்ல அனுபவம் பெற்று முக்கிய அரசுத்துறைகளுக்கு செயலராக வரமுடிகிறது. இளம் வயதில் பல உயர் பதவிகளை அடைய சிவில் சர்வீஸ் தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டும்” என்றார்.

விழாவில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகங்கை கற்பூரபாண்டியன் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார். முடிவில், பேராசிரியர் ஜாகிர் அகமது நன்றி கூறினார்.

Tags: , ,

Leave a Reply