இளம் நாற்றுகளைப் பிடுங்க … இயந்திரமா?

இளம் நாற்றுகளைப் பிடுங்க … இயந்திரமா?

ஹாஜி. மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி

Cell No : 99763 72229

விடிந்தால் வெள்ளிக்கிழமை : 03.04.2015

நள்ளிரவு 1.30 மணி

அன்று என்ன நடந்தது?

இதயத்திற்கு இடி வந்து சேர்ந்தது !

பள்ளப்பட்டி மக்துமியா அரபிக் கல்லூரியைச் சேர்ந்த 9 இளம் பேராசிரியர்கள் தம் சொந்த ஊருக்கு குவாலிஸ் காரில் வந்து கொண்டிருந்தனர். சித்தையன் கோட்டை அருகில் சிக்கன்பட்டி வளைவில் கோரவிபத்து.

ஆலிம்கள் ஏறி வந்த காரும் எதிரே பால் ஏற்றிக் கொண்டு வந்த வண்டியும் மோதிக்கொள்ள, பயணம் செய்த ஆலிம்கள் எட்டுப் பேர்களும் உடல் நசுங்கி ஷஹீதாயினர் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அதில், கலிலுர் ரஹ்மான் என்ற மெளலவிக்கு பலத்த காயம். மருத்துவ மனையில் கவலைக்கிடமான சூழ்நிலையில் இருக்கிறார். வாகன ஓட்டுநர் மோகன் என்பவரும் இறந்துவிட்டார்.

சாலை விபத்தில் வஃபாத்தான மெளலவி தமீமுல் அன்சாரிக்கு திருமணம் முடிந்து 40 நாட்கள்தான் ஆகியுள்ளன. வாகன ஓட்டுநர் அரவாக்குறிச்சியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இப்படி சோகங்களின் பட்டியல்.

மரணம் தொடாத … மனிதர் இல்லைதான். ஆனாலும் அவர்கள் முடிவு இப்படியா … என்று எண்ணத் தோன்றுகிறது.

யா அல்லாஹ் !

இளநாற்றுகளைப் பிடுங்க … இயந்திரமா ?

பள்ளப்பட்டியை கண்ணீர் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. மாநில, வட்டார ஜமாஅத்துல் உலமா சபைகளுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இது. எது நடக்கும் என்பதைத் தெரிந்தவர் நாமில்லைதான். இருந்தாலும் இந்தச் செய்தி அறிந்த உள்ளங்களெல்லாம் அதிர்ந்து போயின. நம் சமுதாயத்திற்கு இதுவரை சந்தித்திராத ஒரு சங்கடம் இது.

என்ன செய்வது ?

இறை நாட்டத்தை நாம் மீற முடியாதே !

பொறுமை கொள்வோம்.

இமைக்கதவுகளை உடைத்து வெளிவரும் கண்ணீரால், ஒரு விண்ணப்பத்தை இறைவனிடமே சமர்ப்பிப்போம்.

யா அல்லாஹ் !

சாலை விபத்தில் ஷஹீதான ஆலிம்களின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவாயாக ! அவர்களின் பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கெல்லாம், உன் சோபன சுவனச் சீமையில் ‘நிழல்’ கொடுப்பாயாக !

யா அல்லாஹ் !

நீ எங்கள் எஜமானன்

நாங்கள் உனது அடிமைகள் !

உன்னை வழிபட, நீ படைத்த படைப்பினங்கள் !

உள்ளத்தைக் கீறிவரும் எங்கள் வேதனைகளை, உன்னிடம் எங்களால்… சொல்லத்தான் முடியும். சொல்லுகிறோம்.

காயம் எம்மிடத்தில் !

மருந்து உன்னிடத்தில் !

கருணைச் சீமானே !

காலம் அறிந்த வல்லவனே !

ஆறுதல் வழங்கு ! அன்பே வழங்கு !

ஆமீன் ! ஆமீன் ! யாரப்பில் ஆலமீன் !

Tags: , ,

Leave a Reply