இறைவா,இவர்களை பொருந்தி கொள்வாயாக!

ksm
                         (மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)
எனது 45 வருட வாழ்வில் நான் சந்தித்து பேசி,பழகி அவர்களின் அன்பை பெற்ற நிகழ்வில் எத்தனையோ மௌத்தாக்கள் இன்றும் என் நினைவில் வந்து போகின்றனர்.
அதில் ஒருவர் முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் மர்ஹூம் செ.மு.ஹமீது அப்துல் காதர் காக்காவாகும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் உயர்கல்வி பெறமுடியாத ஏழ்மை மாணவர்களை நானே நேரில் அழைத்து போய் உரிமையுடன் உதவி கோரும் போதெல்லாம்,
 புன்னகையுடன் அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை அரூஸியாவிலே பட்டம் பெற்ற எத்தனையோ ஆலிம்களில் நீ ஒருத்தன் மட்டுமே இன்னும் என்னை பின் தொடர்கிறாய் என்பார்கள்.
 டொனேசன் இல்லாமல் குறைந்த கட்டணத்தில் இம்மாணவரை சேர்த்துக் கொள்ளவும் என்ற அவர்களது குறிப்பேட்டை கையில் வாங்கும்போது நானே படிக்கப்போவதாக எனக்குள் ஒரு சந்தோஷம்.
இரண்டாமவர்:கீழக்கரை பேரூராட்சியின் தலைவராக ஜொலித்த மர்ஹூம் K.S.M.சாஹுல் ஹமீது ஹாஜியாராகும்.நான் அரூஸியாவில் ஒதிக்கொண்டிருக்கும் நேரமது,மோட்டார் போட்டு நிரப்பப்படும் தண்ணீரில் குளிக்க விரும்பாமல் இயற்கையான ஏற்றத்தில் நீர் இறைத்து குளிப்பவர்கள்.மேலத்தெரு புதுப்பள்ளியில் தான் காலை நேரத்தில் குளிக்க வருவார்கள்.
ஒரு முறை அவர்கள் நீர் இறைப்பதை பார்த்த நான் அருகில் சென்று வாப்பா,நான் இறைத்து ஊற்றட்டுமா?எனக்கேட்டபோது பரவாயில்லப்பா நீ போய் ஓதுகிற வேலையப்பாரு என்றார்கள்.
அடுத்த நாள் சுபுஹு தொழுகை முடிந்ததுமே அவர்கள் வழமையாக குளிக்கும் தொட்டியில் நானே நீர் இறைத்து நிரப்பி விட்டேன்.
இந்த தகவலை அப்பள்ளியின் மோதினார் வசம் சொல்லி வைத்தேன்.
கிட்டத்தட்ட எனது அந்த பணிவிடை மூன்று ஆண்டுகள் தொடர்ந்தன.
நான் ஏன் அவர்களுக்கு இதை செய்தேன்?திருநெல்வேலி மீனாட்சிபுரம் என்ற கிராமமே ஏகத்துவ கொள்கைக்கு சொந்தமாகியதில் எனது ஹாஜியார் வாப்பாவுக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருந்ததால்…
மூன்றாமவர்:கீழக்கரை ஜும் ஆ பள்ளி கதீப் மர்ஹூம் மௌலவி அஸ்மத் ஹுசைன் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
1983ல் கீழக்கரை அளவில் நடைபெற்ற மக்தப் மதரஸாக்களின் மாணவர் பேச்சுப்போட்டியில் நானும் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றேன்.அப்போது நடுவராக இருந்த ஹஜ்ரத் அவர்கள் என்னை அழைத்து உன்னிடம் பேச்சாற்றல் உள்ளது நீ அரபிக்கல்லூரியில் சேர்ந்து மௌலவியானால் நல்லதொரு பேச்சாளராய் சமூகத்தில் அடையாளம் காணப்படுவாய் என்றார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..அவர்களது வார்த்தையை அல்லாஹ் பொருந்தி கொண்டதால் நானும் ஆலிமாகி சுமார் 600க்கும் மேற்பட்ட ஆன்மீகம் மற்றும் அரசியல் மேடைகளில் பேசிவிட்டேன்.எனது பேச்சாற்றலுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தவர்கள் மௌலானா அஸ்மத் ஹுசைன் ஹஜ்ரத் அவர்கள்.
இன்றைய (04-07-2014)வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினத்தில் இந்த நல்லோர்களை நினைவு கூற வைத்த வல்லோனே,இவர்களை உனது இரக்கத்தின் பால் பொருந்தி கொண்டு இவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுபிட்சமாக்குவாயாக!
ஆமீன்,ஆமீன்,யாரப்பல் ஆலமீன்!
Tags: ,

Leave a Reply