இறைவனின் கையை நழுவ விடாதீர்கள் !

 

சிராஜூல் ஹஸன்

 

  திருவிழாக் காலங்களில் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு விழாக் காட்சிகளை ரசித்துக் கொண்டு செல்லும் சிறு குழந்தைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

கூட்ட நெரிசலில் தந்தையின் பிடியை நழுவ விட்ட குழந்தை, மற்ற அனைத்து கேளிக்கைகளையும் மறந்து உடனே அழ ஆரம்பிக்கின்றது. நாம் என்ன தான் சமாதானம் சொல்லி இனிப்புகளையும், விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக் குவித்தாலும் கூட, குழந்தை திருப்தி அடைவதில்லை. அப்பா அப்பா… என்று அழுது கொண்டேதான் இருக்கும். தன் தந்தையைக் காணும் வரை அது நிம்மதி அடைவதில்லை.

இந்த உலகுக்கும், மனிதனிக்கும் உள்ள தொடர்பும் இது போன்றதுதான்.

உலகம் ஒரு பெரிய திருவிழா அரங்கமாக இருக்கிறது. அதில் நம் உள்ளம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமானால், படைத்த இறைவனின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

நாம் எங்கேயும் தொலைந்துபோய் விடாமல், சரியான பாதையில் முன்னேறுவதற்கு அதுதான் வழி. மனிதன் அதனை நழுவவிடும் அக்கணமே, அவனுடைய மன அமைதி குலைந்துவிடுகிறது. மனித வாழ்வு பல சிக்கல்களுக்கு ஆளாகிறது.

திருவிழாவில் தந்தையின் கையை நழுவ விட்ட குழந்தைக்கு ஆறுதல் அளிக்க முடியாத இனிப்புகளைப் போல், நாமும் அமைதியான வாழ்க்கைக்கு பற்பல வழிகளைத் தேடுகிறோம்.

பணம் இருந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துப் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிவிடுகிறோம்.

கூட இருப்பவர்கள் சரியில்லை என்றால் நல்ல நண்பர்களுக்காக அலைகிறோம்.

‘குழந்தைகளுக்குத் தேவையான பராமரிப்பு இல்லை, அவர்களுக்கு ஒரு வழிகாட்டிவிட்டால் நிம்மதியாக வாழலாம்’ என நினைத்து ஏதேதோ திட்டங்கள் தீட்டுகிறோம்.

முடிவில் இவை எதுவுமே சரிபட்டு வரவில்லையே என்று வேதனையால் விம்மி வெடித்து நிராசையின் எல்லையைத் தொட்டு விடுகிறோம்.

இந்தச் சிக்கல்கள் எல்லாம் தீரவேண்டுமானால், படைத்தவனின் கையைப் பற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

திருவிழாவில் குழந்தையைத் தவறவிட்ட தந்தை வானொலியிலும், தொலைக்காட்சியிலும், நாளிதழ்களிலும் விளம்பரம் செய்கிறார். வேறு பல வழிமுறைகளையும் கையாண்டு குழந்தையைக் கண்டுபிடிக்க பெரும் முயற்சி செய்கிறார். ஆனால் இறைவனின் கையைப் பற்றிப் பிடிக்க நாம் அந்த அளவு சிரமப்படத் தேவையில்லை. படைத்தவன் தன் அருட்கரங்களை நமக்காக நீட்டிக் கொண்டுதான் இருக்கிறான். பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்புதானே?

இறைவன் கூறுகிறான்:

“உங்களின் பிடரி நரம்பைவிட நான் நெருக்கமாக இருக்கிறேன். வலுவற்ற பலவீனமான துணைகளை ஏன் தேடித் திரிகிறீர்கள்? என்னிடம் வாருங்கள். அமைதியையும், செழிப்பையும் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தாலும், அதனை நான் மன்னித்து விடுவேன். வாருங்கள். என் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.”

ஏதேனும் ஆபத்தோ சிக்கலோ ஏற்படும்போது அல்லாஹ் எப்போதும் நம்முடன் இருக்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் இறைவனை மறந்துவிட்டாலும் கூட அவன் எப்போதும் நம்மை மறப்பதில்லை. நாத்திகர்களின் – இறைவனையே மறுப்பவர்களின் தேவைகளைக் கூட, இறைவன் நிறைவேற்றிக் கொண்டுதானே இருக்கிறான். அவ்வாறிருக்க, அவனையே நம்பி, அவனுக்கு அடிபணிந்து வாழ்வோரை அவன் மறந்து விடுவானா? அப்படி அவன் மறந்துவிட்டால் நம்மால் இங்கு வாழத்தான் முடியுமா?

நம்முடைய கவலைகளும், துயரங்களும் எத்துணைக் கடுமையானவையாக இருந்தாலும் சரி, அல்லாஹ் அவற்றை அகற்றி விடுவான் என்பதில் நாம் உறுதியோடு இருக்க வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ‘தவ்ர்’ குகையில் மறைந்திருந்த போது, பகைவர்களின் வருகையைக் கண்டு மனம் பதைத்த அபூபக்கருக்கு கூறிய ஆறுதல் வார்த்தை, ‘அஞ்சற்க! இறைவன் நம்மோடு இருக்கிறான்’ என்பதுதான்.

மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு நாட்டைவிட்டுப் புறப்பட்ட போது, கொடுங்கோல் மன்னன் பிர் அவ்னின் படைகள் துரத்தின. நேரம் செல்ல இஸ்ரவேலர்களுக்கும், பிர் அவ்னின் படையினருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. இஸ்ரவேலர்கள் பயந்து போய் ஓலமிடத் தொடங்கிய போது, மூஸா (அலை) மட்டும் அமைதியாக, ‘கவலைப்படாதீர்கள். இறைவன் நம்மோடு இருக்கிறான். அவன் நிச்சயம் நமக்கு நல்ல வழி காட்டுவான்’ எனக் கூறினார்.

அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றதும் கடல் பிளந்து வழி விட்டதும், பிர் அவ்னின் படைகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதும் வரலாறு கூறும் உண்மைகள்.

இப்பொழுது சொல்லுங்கள்

நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவருடைய தோழர்களுக்கும் ஏற்பட்ட துன்பங்களை விட-

மூஸா (அலை) அவர்களுக்கும் அவருடைய சமூகத்தாருக்கும் ஏற்பட்ட சோதனைகளைவிட – நம்முடைய துன்பங்களும், சோதனைகளும் அதிகமாகிவிட்டனவா?

பலவீனமான மனிதனுக்கு ஒரு சிறிய பிரச்சனை கூட பெரிதாகத் தோன்றும். ஆனால் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவருக்கு, மலைபோன்ற பிரச்சனையும் கடுகளவே தோன்றும். அதுவும் கூட இறையருளால் விரைவில் மறைந்துவிடும். ஏனெனில் அல்லாஹ்வின் அருள் எப்படியெல்லாம் பொழிகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நம் சிற்றறிவுக்கு இல்லை.

‘அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். அனைத்துப் பிரச்சனைகளையும் அவன் தீர்த்து விடுவான்’ என்னும் நம்பிக்கைதான் மகிழ்ச்சிக்கு அடிப்படையாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் மன அமைதியையும் நிறைவையும் பெற முடியும்.

பிரச்சனைகளும் சிக்கல்களும் இல்லாத மனிதனே உலகில் இல்லை. ஆனால் சிக்கல்கள் ஏற்படும்போது நடந்து கொள்ளும் முறை மற்றும் மனப்பாங்குகளில்தான் இறைநம்பிக்கையாளனும், இறைமறுப்பாளனும் வேறுபடுகின்றனர். துன்பங்களை நீக்கிவிடுவான் என்னும் நம்பிக்கை ஆழமாக வேரூன்றி இருப்பதால், ஒரு நம்பிக்கையாளன் நிராசையோ, துக்கமோ அடைவதில்லை. முற்றிலும் இறைவனையே சார்ந்திருந்து அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பான்.

வாழ்வில் நாம் அமைதி காண விரும்பினால், இந்த நிமிடமே இறைவனின் கைகளைப் பற்றிப் பிடிப்போம். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழியில் உறுதியுடன் முன்னேறுவோம்.

 

நன்றி : நர்கிஸ் – மே 2014

Tags: ,

Leave a Reply