இறைமறை இலைமறைக் க(ன்)னிகள்

 

பேரா. திருமலர் மீரான்

 

பர்தா மூடுபடாம் இல்லை

சாயாத சரியாத சரியான

சமூக அறி முகப்படாம் !

 

இலை மறைக் காய்கனிகள்

கண்ணடி சொல்லடி படா !

இஸ்லாமிய இறைமறை

புர்கா இலை மறைக் கனிகள்

கண்ணடி சொல்லடி கையடி

படாமல் காப்பாற்றப் படுகின்றன !

 

தலை முறையாகக் கலை

உடல் காட்டும் காய் கன்னிகள்

வெம்பிப் பழுத்ததால்

வேகம் கல்லடி படுகின்றன !

 

கறுப்புத் துணிக்குள்ளே

வெள்ளைக் கற்பும் உள்ளப்

பச்சைப் பொற்பும் உறுதி

உறையுள் பத்திரம் போல்

பாதுகாக்கப்படுகின்றன !

 

இங்கே தெளிவு சுழிவுகள்

விளம்பரப் படுத்தப்படா

பர்தா விளம்பும் அறம் இது !

 

காமாந்தரக் கண்களின்

விழிபூட்டும் சாவி இது !

திறந்து பார்த்திடவும்

கலவிக்குப் பதிவு செய்யவும்

திறந்தவெளிப் பல்கலைக்கழகமல்ல !

 

உடலை உருக்குலைக்காத

உத்தம உடை இது

சன்னல் கதவுகள் இன்றி

பவித்ரமான பவனமாக

பாதுகாக்கப்பட்ட ஆடை !

 

நிர்வாணத்தை நிர்மாணிக்காத

அம்மணம் இல்லாத மான

மணமிகு அணி ஆவணம் !

 

காரணமின்றியே கூவும்

கோவண வாரணங்களுக்கு

பதில் நல்கும் விவரணங்கள் !

 

பாலியல் வன்முறைகளால்

சதா ரணப்பட்டுக் கிடக்கும்

சாதாரணங்கள் இடையே

பூரணமான ஆபரணங்கள் !

 

அரைகுறை ஆடையல்ல

அழகு சொரியும்

இறைமறை நிறையாடை !

 

பதிவிரதைகள் தம் அழகை

பர்த்தாக்களுக்காகப்

பாதுகாத்து வைக்கும்

பர்தா மேலாடை

மேலானவன் தந்த

ஆடைகளில் மேல் ஆடை !

 

இஸ்லாமிய இஸத்தின்

இலட்சிய இலாஞ்சனை !

ஜகன்னத்தைத் தடுக்கும்

ஜன்னத்தின் வாயில்கள் !

 

நன்றி :

சமரசம்

16 – 31 மார்ச் 2013

கவிஞருடன் பேச : 94950 11317

Tags: , ,

Leave a Reply