இருண்ட வரலாறு ஒளி பெற்றது !

 

அ. மா. சாமி

 

  இன்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிழைப்புத்தேடி அரேபியாவுக்குப் போகிறார்கள். ஆனால் அன்று – ‘சங்ககாலம்’ என்று சொல்லப்படும் தங்க காலத்தில் – அரேபியர்கள் வணிகம் செய்யத் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வழியாக இசுலாமிய சமயமும் தமிழ் நாட்டுக்கு வந்தது.

இதுபோல, இலங்கையில் உள்ள ஆதம் மலையைத்தரிசிக்க அரேபியர்கள் வந்தார்கள். வணிகமும் செய்தார்கள். இலங்கை முழுவதுமே தமிழ் நிலமாக விளங்கிய காலம் அது.

இவ்விதம் தமிழுக்கும், அரபு மொழிக்கும் இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலாக நல்லுறவு இருந்து வருகிறது.

தமிழர் தந்த நன்கொடை !

தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தமிழர்கள் இசுலாமிய சமயத்தைத் தழுவியதுடன், அரபி, உருது, பாரசீகம் ஆகிய மொழிகளையும் கற்றார்கள். கற்றதுடன் மட்டுமல்ல; அந்த மொழிகளை வளப்படுத்தவும் செய்தார்கள். அந்த மொழிகளுக்குத் தமிழர் தந்த நன்கொடை ஏராளம் ! ஏராளம் !!

குறிப்பாக, தமிழுக்கே உரிய சிறப்பான உரைநடை, அணி அலங்காரங்களைக் கொண்டு அரபு மொழியை அழகுபடுத்தினார்கள். அரபு மொழியில் சித்திரக்கவிகள் கூடப் பாடினார்கள். அரபி மொழி இலக்கியத்தை வளப்படுத்தினார்கள், தமிழர்கள்.

ஆனால்,

தமிழ் மக்கள் தந்த இந்த நன்கொடைகள் வரலாற்று ஏடுகளில் இடம் பெறாமலே போய்விட்டன. வடநாட்டார் வழங்கிய இலக்கியங்கள் மட்டுமே வரலாறு ஆயின. அந்த வரலாறுகளில் தமிழர்களைப் பற்றி ஒருவரி கூடக்கிடையாது !

அதுமட்டுமா? தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் எத்தனையோ இசுலாமியப் பெரியவர்கள் – அறிஞர்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் பெயர்களும் வரலாற்றில் இடம் பெறவில்லை.

வடநாட்டார் – வெளிநாட்டார் எழுதிய வரலாறுகளில் தான் அப்படி என்றால், தமிழ்நாட்டில் வரலாறே எழுதப்படவில்லை ! அரேபிய மொழிகளுக்கு தமிழர் தந்த நன்கொடைகள் மண் மூடிக்கிடந்தன. வெளி உலகம் அறியாத இருண்ட வரலாறாக இருந்து வந்தது

ஒளி பிறந்தது !

இன்று ஒளி பிறந்து விட்டது ! இருள் விலகி விட்டது ! அரபு மொழிகளுக்குத் தமிழர் தந்த நன்கொடையை – அந்த நன்கொடைகளை அள்ளித் தந்த பெரியவர்களை உலகமே அறிந்து கொள்ள வழி பிறந்து விட்டது.

”தமிழ் நாடு, இலங்கையில் அரபி, அர்வி, பாரசீகம்” என்ற அரியநூலை அறிஞர் முனைவர் தைக்கா ஷுஐபு ஆலிம் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு இலங்கையைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் அரபி, பாரசீகம், உருது ஆகிய மொழிகளின் இலக்கியத்துக்கும் கல்விக்கும் ஆற்றிய அரும்பணிகளின் தொகுப்பு, இந்நூல்.

இது ஆங்கில நூல் மறைவாக நமக்குள் பேசிக்கொள்வதில் மகிமை இல்லை அல்லவா? உலகறிய ஆங்கிலந்தானே உதவும் !

30 ஆண்டு முயற்சி !

880 பக்கமுள்ள பெரிய நூல், இது.

பொருளடக்கம் மட்டுமே 32 பக்கம் !

மேற்கோள் நூற்கள் 16 பக்கம் !

20 அத்தியாயங்கள், 60 இணைப்புகள் !

ஒரு செய்தியைக் கூட விட்டுவிடாமல் ஆசிரியர் மிக முனைப்பாக இந்நூலை எழுதியிருக்கிறார்.

ஒரு செய்தியைக் கூட விட்டுவிடாமல் ஆசிரியர் மிக முனைப்பாக இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதற்கு இவையே எடுத்துக்காட்டுகள் !

அது மட்டுமா? ஆசிரியரே ஒரு அரபி மொழி அறிஞர். அரபி புலமைக்காக இந்திய அரசின் விருது பெற்றவர். பரம்பரையாக அரபுப்புலமை பெற்ற கீழக்கரைக் குடும்பத்தில் பிறந்தவர். (இக்குடும்பத்தின் முன்னோர்கள் 1200 ஆண்டுகளுக்கு முன் புனித நகரமான மதினாவில் இருந்து கீழக்கரையில் குடிபெயர்ந்தவர்கள்.) தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் உள்ள பல அரபுக்கல்லூரிகளின் கல்வி- நிர்வாகத்தில் பங்கு கொண்டவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அரிய பெரிய நூலை எழுத, ஆசிரியர் 30 ஆண்டுகாலம் உழைத்திருக்கிறார். தேனீயைப் போல பல நாடுகளுக்குப் பறந்து சென்று, பக ஆயிரம் நூற்களைப்படித்து செய்திகளைச் சேகரித்திருக்கிறார். ஆசிரியரின் கடுமையான உழைப்பை ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது.

அரபுத் தமிழ்

அரபுச் சொற்களைத் தமிழில் எழுத முடியவில்லை என்று, அரபு எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதினார்கள். ஆனால், தமிழை அரபியில் எழுத முடியாமல் புதிதாகச் சில அரபு எழுத்துக்கள் படைக்கப்பட்டன. ழ, ம ஆகிய தமிழ் எழுத்துக்கள் அரபியில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த சுவையான வரலாற்றை ஆசிரியர் சொல்வதுடன், அரபுத் தமிழின் வளர்ச்சி, அதற்குத்துணை நின்றவர்கள், பின்பு ஏற்பட்ட வீழ்ச்சி, அதற்கான காரணங்கள் ஆகியவற்றையும் ஆசிரியர் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அரபு, அரபித் தமிழ், உருது, பாரசீக மொழிகளில் ஆசிரியர் புலமை படைத்தவர். எனவே, இந்நூலை முழுமையாகப் படைத்திருக்கிறார்.

தமிழர் வரலாற்றின் இருண்ட ஒரு பகுதியை ஒளி பெறச் செய்யும் ஒப்பற்ற நூல் இது. இதன் முதல் பிரதியை இந்தியக் குடியரசுத்தலைவர் சங்கர் தயாள் சர்மா பெற்றுக்கொண்டார். “எல்லா இந்திய மொழிகளிலும் வெளி வரவேண்டிய அற்புதமான ஆராய்ச்சி நூல் இது” என்று அவர் பாராட்டினார். இந்நூலுக்காக அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் ஆசிரியருக்கு “முனைவர்” (டாக்டர்) பட்டம் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறது.

-நன்றி : ‘ராணி’ வார இதழ்.

 

Tags: , ,

Leave a Reply