இருகாட்சிகள் : தாட்சண்யம் – ஹிமானா சையத்

இருகாட்சிகள்

தாட்சண்யம்

( ஹிமானா சையத் )

இன்று

ஊர்க் கூட்டம் இருப்பதாக

ஊர்ப் பியூன் அறிவித்தார் !

தொழுதவர்கள் அனைவரும்

தளத்தில் வந்தமர்ந்தார்கள் !

தலைவர் உமர்கான்

தூணருகில் உட்கார்ந்தார் !

முகமன் கூறி

முறையாகத் தொடங்கி வைத்தார் !

முக்கிய விஷயங்கள்

முடிந்தபின் சபைநோக்கி,

“ஏதேனும் இனி உண்டா?”

எனக்கேட்டார். தலைவர் !

”ஆம் “ என சொல்லி

அஹ்மது எழுந்து நின்றான் !

தலைவர் முகத்தில்

தயக்கம் ; கலக்கம் !

அஹ்மதொரு அப்பாவி

அவ்வூரின் கடைமனிதன் !

என்ன விஷயத்தை

இங்கு அவன் சொல்வானென

ஏற்கனவே தெரிந்ததனால்

ஏற்பட்ட குழப்பம் அது !

அஹ்மது வீட்டுக்கு

அருகிருந்த நிலத்தையெல்லாம்

அவ்வூரின் பணக்காரர்

அ.மு. வாங்கி விட்டார்

அஹ்மது வீட்டுக்குள்ளும்

’ஆறு அடி’ இருக்குதென்று

அடாவடித் தனமாக

அவர் கூறும் விஷயத்தை

அஹ்மது எழுப்பி விட்டால்,

அமளிதான் அங்கு எழும் !

ஆனாமூனா பணக்காரர் !

அடிதடிக்கு அஞ்சாதவர் !

ஊரில் பெரும்புள்ளி

ஊரெங்கும் சொத்துப்பத்து

அதிகார வர்க்கமெல்லாம்,

அவர் பக்கம்: அவ்வூரில்

அவர்பேச்சை மீற

யாருக்கும் துணிவில்லை !

அவ்வூர்த் தலைவரும்

அதற்கு விதி விலக்கல்ல !

“அப்புறமா பார்க்கலாமே

அஹ்மது?” எனத் தலைவர்

அவனை அமரவைக்க

அவசரமாய் முயற்சி செய்தார் !

ஆனால் அஹ்மது

அமரவில்லை; எழுந்து நின்று

பணிவாய் வேண்டினான்;

பரிதாபம் அவன் குரலில் !

”ஏழைக்கு இரங்குங்க

(இ)ரப்பு உங்கள ரட்சிப்பான் !

இருக்கற வீடும் போய்ட்டா

ஏழை நான் எங்கேபோவேன்?”

தலைவர் தலைகுனிந்தார் !

தர்மசங்கடத்தில் நெளிந்தார் !

ஆனால் அங்கிருந்தோர்

ஆனாமூனா ஆட்களன்றோ !

போட்டார்கள் கூச்சல்

போர்க்களம் தோற்றதுவே !

நீதிசெத்தது; நேர்மை தோற்றது !

நியாயத்தை கொன்றவர்கள்

நிமிர்ந்து நடந்தார்கள் !

அன்று

 

வீர உமர் ஹத்தாப் ரலியின்

விசாரணை மண்டபம் !

குற்றவாளிக் கூண்டில்

குபேர ஜபலா !

அண்டை நாட்டவர்

ஆட்சித் தலைவரின் நண்பர் !

குற்றம் சாட்டியவர்

கூன் விழுந்த விவசாயி !

கூழுண்டு வாழும்

குடிமகன்; சாமான்யன் !

”அறியாமல் செய்த

சிறுபிழையைப் பெரிதாக்கி

அடித்துத் துவைத்துவிட்டார்

அநியாயம் இழைத்துவிட்டார் !”

சொன்னார் விவசாயி

சோகம் அவர்முகத்தில் !

கேட்ட கலீபா

கேள்விக் கணை தொடுத்தார் !

கஃபாவை வலம் வந்த

கூட்டத்தில் இருவருமே

முன் பின்னாக,

முறையாக ‘தவாப்’ செய்தார்

அப்போது அரசரின்

அங்கி தரைபடிய,

அவ்விவசாயியின்

அடிகள் அதில் பதிய,

அரசர் நிலைகுலைந்தார்

ஆத்திரத்தில் நிலையிழந்தார் !

நடந்தது இது தான்

நன்றாகப் புரிந்ததுவே

‘வேண்டுமென்று செய்யவில்லை

விவசாயி’ என்பதுவும்

வீரர் உமரவர்க்கு

விளங்கியது; அவர் சொன்னார்:

“ஆத்திரத்தில் அடித்தது

அப்பட்டமான தப்பு !

அரசன் என்றாலும்

ஆண்டியே என்றாலும்

அல்லாஹ்வின் நீதிக்கு

அனைவரும் சமமாகும் !

எனவே, ஜபலா

ஏழை விவசாயியிடம்

எந்த நிபந்தனைக்கும்

இடமின்றி, மன்னிப்பு

கோரிட வேண்டும்” என

கூறினார் கலீபாவும் !

ஜபலா சினந்தார்;

’ஜபர் தஸ்த்’ தைக் காட்டினார் !

ஆனால் உமரவர்கள்

அசைந்து கொடுக்கவில்லை !

அரசரைப் பணிய வைத்தார்;

நீதியைக் காக்க;

நியாயத்தை நிலைநாட்ட;

தாட்சண்யம் பார்க்காது

தடை, தயக்கம் காட்டாது,

நேருக்கு நேராய்

நியாயத்தை சொன்னதனால்

வரலாற்றில் நின்றார்கள்

வீர உமர் ஹத்தாப் (ரலி) !

அந்த உமர் ஹத்தாபும்

இந்த உமர்கானும்

சொந்த பந்தம்தான் !

சோதர முஸ்லிம்கள்தான் !

என்ன செய்வது?

சொல்லுங்கள்…

என்ன செய்வது?

நன்றி :

நர்கிஸ்

நவம்பர் 2011

Tags: , ,

Leave a Reply