அறிவியல் பயணம் 2016

அறிவியல் பயணம் 2016

ஆசிரியர் : (கட்டுரைகள்) பேரா. கே.ராஜூ

வெளியீடு: மதுரை திருமாறன் வெளியீட்டகம்

பழைய எண் 35, புதிய எண் 21,

சாதுல்லா தெரு, தி நகர்.

சென்னை – 600 017

அலைபேசி – 7010984247

பக்கம் : 168, விலை : ரூ.120/-

ப. முருகன்

——————————————————————————————————————————————

அஞ்ஞான இருளகற்றும் விஞ்ஞான வெளிச்சம்

இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டில் இருக்கிறோம். அறிவியல் வளர்ச்சியின் அற்புதங்கள் சூழ்ந்த உலகத்தில் வசிக்கிறோம். இன்னொருபூமிக்கான ஆராய்ச்சி தீவிரமாகி இருக்கிறது. நிலவில் நீர்உண்டு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தில்தண்ணீர் உண்டு என்கிறது ஓர் ஆய்வு.அங்கு ஏதாவது உயிரணு இருக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது அந்த ஆய்வு. ஆனால் காட்சி ஊடகங்கள் அமானுஷ்யம், ஆவி, பேய், பிசாசு,மாயமந்திரங்கள் என அறிவியல் பூர்வமற்ற மூடநம்பிக்கைகளை பரப்புகின்றன. அச்சு ஊடகங்களோ விஞ்ஞானக்கருத்துக்களை, செய்திகளை விடஅஞ்ஞானத்தை பரப்பும் செய்திகளையே அதிகமாக வெளியிடுவதில் அக்கறை காட்டுகின்றன.

இந்நிலையில் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய ஒளியிலிருந்து மின் ஆற்றல், சிறுநீரில் மின்சாரம் உற்பத்தி, தண்ணீர் சேமிப்பு தொடர்பான சிலமுன்மாதிரி கிராமங்கள், மனிதர்கள், பூச்சிக்கொல்லி மருந்தான எண்டோசல்பானால் ஏற்படும் கேடு, சில நோய்களுக்கான மருத்துவங்கள், இயற்கையின்கொடைகள்- கருப்புத் தங்கம் மிளகு,பசுமைத்தங்கம் மூங்கில்-அறிவியல் அறிஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள், சிம்பன்சிக்கு சமைக்கத் தெரியுமா? காலைஉணவைதவிர்க்க வேண்டாம், மகரந்தச் சேர்க்கையும்உணவு உற்பத்தியும்… இப்படி பல வகையான தலைப்புகளில் 12 துறைகளில் 50 கட்டுரைகள் கொண்டநூல் ‘அறிவியல் பயணம் 2016’ தற்போது வெளிவந்துள்ளது.

இந்த நூலின் ஆசிரியர் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியவர். எளிமையாகவும் எளிதில் புரியும் வகையிலும் கல்லூரியில் பயிற்றுவித்தவர். அதேபாணியிலேயே பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். அப்படி தீக்கதிர் நாளிதழில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் கதிர் எனும்பகுதியில் தொடர்ந்துஎழுதி வரும் கட்டுரைகளை தொகுத்து ஏற்கெனவே நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது ஐந்தாவது நூலாக 2016ஆம் ஆண்டு வெளிவந்தகட்டுரைகளில் ஐம்பதை தேர்வு செய்து அது வெளியான நாள் உள்ளிட்ட விபரங்களுடன் இந்த நூல் வந்திருக்கிறது.

அறிவியல் விசயங்களை எளிமையாக எழுதிய முன்னோடி பெ.நா.அப்புசாமி, சுஜாதா, மணவை முஸ்தபா வரிசையில் பேரா.கே.ராஜூவுக்கு நிச்சயம் இடம்உண்டு. முந்தைய எழுத்தாளர்கள் பெரும்பாலும் அறிவியலை மட்டுமே எழுதியவர்கள். ஆனால் பேரா. ராஜூ அறிவியல் உலகை ஆட்டுவிக்கும் அரசியல்பற்றியும் நாட்டு மக்களிடையே அறிவியல்பூர்வ சிந்தனைகளைப் பரப்புவது பற்றியும் மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் வகையிலும் சிறந்தகட்டுரைகளை எழுதுவதில் வல்லவர்.

தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட அமெரிக்கா, அமெரிக்க அணு உலைகள்: நமக்கு கிடைக்கப்போவது என்ன?போன்ற கட்டுரைகள் உலக அரங்கில்கார்பன் வெளியீடு பிரச்சனையில் அது செய்யும் துரோகம், அணு உலைகளை இந்தியாதலையில் கட்டும் அமெரிக்காவுக்கு அடி பணியும் இந்திய அரசின்மோசமான நிலைமை பற்றியும் தெளிவாக்கும் கட்டுரைகள்.

நகரங்கள் மூச்சுவிட வேண்டுமானால்… டீசல் கார்கள் வேண்டாம், குப்பை மேலாண்மை, சாலை விபத்துக்களிலிருந்து மீள, ரயில்வே பயணிகளை பாதுகாப்பதுஅரசின் கடமையில்லையா? பொதுவான அடிப்படை மருந்துகளே எளிய மக்களின் உயிர்நாடி போன்ற கட்டுரைகள் சாதாரண மக்களின்நல்வாழ்வுக்கானவைஎன்பதை நன்கு உணர்த்துகின்றன.

மனித மரபியலில் இனம் என்பது உண்டா? எனும் கட்டுரை ‘இல்லை’ என்கிறது. ‘இனம் என்ற கோட்பாட்டுக்கே இந்த மரணஅடி என்றால் ஜாதி என்ற பிறப்பின்அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பிரிவினையைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. மரபியல் காரணிகளின் அடிப்படையில்மனிதர்களில்உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற கோட்பாட்டி ற்கு உயிரியலில் இடமில்லை என்ற சமூகவியலாளர்களின் கருத்தையே இந்த விஞ்ஞானிகள் குழுஉறுதிசெய்திருக்கிறது’’ என்று முத்தாய்ப்பாக முடித்திருப்பது சிறப்பு.

ஆனால் மத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளோ இத்தகைய சிந்தனைகளுக்கு எதிராகவே உள்ளது. செக்கச் சிவந்த, உயரமான, வீரமான, ஆண்குழந்தைபிறக்க வேண்டுமா? இறைச்சி உண்ணாதீர்கள், பாலுறவு கொள்ளா தீர்கள்… எனபல ‘அரிய’ ஆலோசனைகளை கர்ப்பிணிப் பெண்களுக்காக ஆயுஷ்அமைச்சகத்தின் சார்பில் பிரசுரம் வெளியிட்டு அறிவியலுக்கு ஒவ்வாத வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த நூல் அறிவியல்ரீதியாக சிந்திக்க வைக்க வேண்டும் என்று கூறும் அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த நூலில்இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் தேவையான படங்களுடன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. அதற்குமதுரை திருமாறன்வெளியீட்டகத்தை பாராட்டியே தீர வேண்டும். தாங்கள் ஆட்சியில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி புராணங் களையும்,கற்பனைகளையும் வெறும் நம்பிக்கைகளையுமே மக்களிடம் திணிக்க முயலும் ஆர்எஸ்எஸ்-சின் தீய எண்ணங்களை முறியடிக்கவும் மக்களை விழிப்படையச்செய்யவும் இந்த நூல் உதவியாக இருக்கும். மாணவர்களும் இளைஞர்களும் மட்டுமல்ல அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

 

Leave a Reply