விண்ணை அளந்த விஞ்ஞானி

அறிவியல் கதிர்
விண்ணை அளந்த விஞ்ஞானி யு.ஆர்.ராவ்
பேராசிரியர் கே. ராஜு

ஜூலை 24 துயரமான நாளாக நம்மைக் கடந்து சென்று விட்டது. இந்தியாவின் இரு தவப்புதல்வர்கள்- தலைசிறந்த அறிவியலாளர்கள்- விண்வெளி விஞ்ஞானி டாக்டர் யு.ஆர்.ராவ், அறிவியலாளரும் கல்வியாளருமான டாக்டர் யஷ்பால் ஆகிய இருவரும் அன்று நம்மிடமிருந்து விடைபெற்றார்கள்..
1932-ம் ஆண்டு பிறந்த டாக்டர் ராவ் 1963-ல் தனது 31வது வயதிலேயே பல அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார். அன்று தொடங்கிய அவரது அறிவியல் பயணம் அவரது வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தது. இறுதிவரை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் பணிக்கு வந்துகொண்டிருந்தார்.
டாக்டர் விக்ரம் சாராபாயின் கீழ் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தபோது ராவ் விண்வெளி அறிவியலில் நுழைந்தார். சூரிய மின்காந்தப் புயல் காரணமாக புவியின் காந்தப்புலம் எவ்வாறு பாதிக்கப்படும் என ஆய்வு செய்தார். இந்தியா விண்வெளி யுகத்தில் நுழைவதற்கும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் சாராபாய் முன்னோடியாக இருந்தார் என்பது நாம் அறிந்த செய்திதான். அமெரிக்காவில் வான்இயற்பியல், செயற்கைக்கோள் ஆய்வுகளில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, டாக்டர் ராவ் 1966-ம் ஆண்டில் இந்தியா திரும்பினார். இந்தியாவில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு ஒரு செயல்திட்டத்தைத் தயாரிக்கும் பணியை சாராபாய் ராவிடம் ஒப்படைத்தார். இதை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்ட ராவ், இந்தியாவின் 5-வது நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை ஆர்யபட்டாவின் பெயரில் தயாரான முதல் செயற்கைக்கோளினை முப்பதே மாதங்களில் நிர்ணயிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்குள் தயாரித்துவிட்டார். 360 கிலோகிராம் எடை இருந்த அந்த செயற்கைக்கோள் சோவியத் யூனியனின் ஏவுதளத்திலிருந்து 1975 ஏப்ரல் 19 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. என்னிடம் ஒரு இளைஞர் குழு இருந்தது. அவர்களுக்கு அனுபவம் இல்லாவிடினும் பணியைச் சரியாகச் செய்துமுடிக்க வேண்டும் என்ற உறுதியும் ஆர்வமும் இருந்தன. அவர்களது நிகரற்ற உற்சாகம், அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, அளவற்ற நம்பிக்கை, இயலாது என எதையும் எப்போதும் சொல்லாத அணுகுமுறை எல்லாம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டன. பின்னர் இதுவே இஸ்ரோவின் கலாச்சாராமாக மாறியது என ராவ் கூறியதாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் வி.ஜெயராமன் தெரிவிக்கிறார்.
ராவ் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் செயலாற்றிய அறிவியலாளர். 1984-லிலிருந்து 1994 வரை தலைவராக இருந்து இஸ்ரோவுக்கு வழிகாட்டினார். சொந்த முயற்சியிலேயே செயற்கைக்கோள்கள் தயாரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்திற்கு அவர் வடிவம் கொடுத்தார். பெங்களூருவில் இஸ்ரோவின் செயற்கைக்கோள் மையத்தை நிறுவினார். இந்தியாவின் தரம் மிக்க நவீன செயற்கைக்கோள்கள் அங்கேதான் தயாரிக்கப்படுகின்றன. ஆர்யபட்டாவிற்குப்  பிறகு, வெவ்வேறு பயன்பாடுகளுக்கான செயற்கைக்கோள்கள் தயாரிப்பதில் இந்தியா உலகத்தர வரிசையில் உள்ள நாடுகளில் ஒன்றாக ஏற்றம் பெற்றது. ராவ் இஸ்ரோ தலைமைப் பொறுப்பில் இருந்தபோது பாஸ்கரா 1, பாஸ்கரா 2, ரோஹிணி, ஆப்பிள் (Apple) என அழைக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகிய பல செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டன. ஆப்பிளின் மின்காந்த ஒத்திசைவைச் சரிபார்க்க அதை ஒரு மாட்டுவண்டியில் எடுத்துச் சென்றது பழைய இந்தியாவுக்கும் புதிய இந்தியாவுக்கும் உள்ள தொடர்ச்சியை எடுத்துக் காட்டும் நிகழ்வாக அமைந்தது எனலாம்! மிக உயர்ந்த தொழில்நுட்பத்தை அதிக செலவின்றி முடிக்கும் நமது திறன்தான் இந்தியாவின் விண்வெளி பரிசோதனைகளை நட்சத்திர உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு 450 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து விண்கலத்தை அனுப்பிய தேசம் நம்முடையது என்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
அவரது வழிகாட்டுதலில் இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் (Indian remote sensing satellites -IRSs) இந்தியாவில் ஒரு அறிவியல் புரட்சியையே உருவாக்கிவிட்டன. பயிர் விளைச்சலை கணிக்க, தேவைக்கு அதிகமாக உரத்தைப் பயன்படுத்தும்போது மண் எந்தளவுக்கு அமிலமயமாகிறது என்பதைக் கண்டறிய, பயிர்களைப் பீடிக்கும் கொள்ளை நோயை முன்கூட்டியே அறிய, இமாலயப் பகுதிகளில் பனி உருகுவதைப் பொறுத்து ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் ஓடி வருமா என்பதைக் கண்டுபிடிக்க, கடலில் மீன்களைப் பிடிக்கச் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து மீனவர்களுக்கு உதவ, காடுகள் அழிவதைப் பற்றி எச்சரிக்கை செய்ய, மக்கள் தொகை குறைவாக உள்ள இடங்கள் வழியாக சுற்றிச் செல்லும் சாலைகள் (ring roads) அமையும் இடத்தைக் கண்டுபிடிக்க… என அவற்றின் பயன்பாடுகள் எண்ணிலடங்கா. ராவினுடைய மேற்பார்வையில் மொத்தம் 18 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன. இன்று செயற்கைக் கோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்பு, தொலை உணர்வு, வானவியல், கல்வி, கடற்பயணம், கடல் ஆய்வு, உளவறிதல் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எஸ்.டி.டி. (subscriber trunk dialling) என்ற வகைத் தொலைபேசிச் சேவை ராவ் அவர்களது மிகப் பெரிய பங்களிப்பு. உடுப்பி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில் உலகம் போற்றும் விஞ்ஞானியாக வளர்ந்தது ஓர் அதிசய சரித்திரம்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, வேறு பல நாடுகளிலிருந்தும் ஏராளமான விருதுகளை அவர் வாங்கிக் குவித்தார். 25 பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவப் பட்டங்கள் அளித்துச் சிறப்பித்தன. துகள் இயற்பியலாளராக 300-க்கும் மேற்பட்ட தரமான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை ராவ் வழங்கியுள்ளார்.
இந்த அரும்பெரும் விஞ்ஞானி இந்தியாவின் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகலன் தயாரிப்பு முயற்சிகளுடன் பின்னிப் பிணைந்துவிட்ட ஆளுமை.
( டாக்டர் யஷ்பால் பற்றி அடுத்த வாரம்)

Tags: , ,

Leave a Reply