அறிவியல் -ஆக்கமா? அழிவா?

2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை

அறிவியல் கதிர்  அறிவியல் -ஆக்கமா? அழிவா?

பேராசிரியர் கே.ராஜு

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் கண்டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள் அதற்கு முன்பு சுமார் ஐந்து லட்சம் வருடங்களில் ஏற்பட்ட ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை தோன்றியுள்ள மொத்த விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அதில் 90 சதவீதத்தினர் கடந்த நூற்றாண்டில் தோன்றி வாழ்ந்தவர்கள் – வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான்!

இன்று அறிவியல் வளர்ச்சி நமது வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் இறந்தபோது, அவருடைய மரணச் செய்தி உலகம் முழுவதையும் எட்ட பல நாட்கள் ஆயிற்று. புறாக்களின் மூலமாகத்தான் அந்தச் செய்தி முதலில் இங்கிலாந்தை அடைந்தது! இன்று..? அமெரிக்காவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியை அது நடந்து கொண்டிருக்கும்போதே இங்கு தமிழகத்தில் பார்க்க முடிகிறது. எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செய்தி அந்த நொடியிலேயே நம்மை எட்டிவிடுகிறது. தூரம் இன்று ஒரு பிரச்சனையே அல்ல. உலகம் சுருங்கிவிட்டது என்று கூறி இன்று பெருமிதப்படுகிறோம். இன்று சென்னைக்கோ, மும்பைக்கோ பயணம் செய்வதுபோல சந்திரனுக்கோ, செவ்வாய்க்கோ பயணம் செய்யக் கூடிய காலம் விரைவில் வந்துவிடக் கூடும்.

 

கேள்வி பிறந்தது அன்று…

இதே போன்ற மாற்றங்கள் தொழிலில், விவசாயத்தில், மருத்துவத்தில், ஏன் – சமையலில் கூட நடந்து கொண்டே இருக்கின்றன. மனிதனுடைய அறிவு எல்லாத் துறைகளிலும் ஒவ்வொரு நொடியும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. மின்னணுவியலும் கணினியும் இணைந்து தொழில்நுட்பத் துறையில் மாபெரும் புரட்சியையே நடத்திக் கொண்டிருக்கின்றன. மனித சமுதாய வரலாற்றில் மிக மேம்பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனித சமூகத்தைப் பல காலம் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்திக் கொண்டிருந்த ஏராளமான கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் விடைகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் காலம் இது.

“கேள்வி பிறந்தது அன்று – நல்ல பதில் கிடைத்தது இன்று” என்று கவிஞர் கண்ணதாசன் இந்த அறிவியல் முன்னேற்றத்தை வாழ்த்திப் பாடினார். நாம் இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பதாக வைத்துக் கொண்டால், அப்போது நாம் இன்று கேட்கிற கேள்விகளுக்கு அவசியமே இல்லாமல் போகக்கூடும், காரணம், அவற்றிற்கான விடைகள் அப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் !

ஆனால்…?!

ஆனால்…இது பெரிய ஆனால்..! இவ்வளவு முன்னேற்றங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் மனித சமுதாயம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறது! இது என்ன விபரீதம்? உலக மக்கள் எண்ணிக்கை இன்று ஐநூறு கோடியைத் தாண்டி விட்டது. இதில் சுமார் 170 கோடி மக்களுக்கு இன்னும் குடிப்பதற்குச் சுத்தமான நீர் கிடைக்க வழியில்லை. சுமார் 120 கோடி மக்களுக்கு அடிப்படைக் கழிப்பிட வசதி கூட இல்லை. இன்றும் பட்டினியிலும், வறுமையிலும், மூடநம்பிக்கையிலும் எவ்வளவு கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ! ராக்கெட்டுகளும், செயற்கைக் கோள்களும் வானவெளியில் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும்போது, அன்றாடம் அரிசியும் மண்ணெண்ணெயும் வாங்க அலைமோதும் மக்களையும் பார்க்க முடிகிறது. மருத்துவ விஞ்ஞானம் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்துகொண்டிருக்கும் காலத்திலும் சோதிடன் மந்திரித்துக் கொடுக்கும் கயிற்றுக்காகக் காத்துக் கிடக்கும் ஜனங்களையும் பார்க்க முடிகிறது. எழுத்தறிவின்மை, வேலையின்மை, விஷமாகி வரும் சுற்றுச்சூழல் போன்ற கேடுகள் சமுதாயத்தை வாட்டி வதைத்து வருகின்றன. இப்படிப்பட்ட சமூகக் கேடுகளை அறிவியலினால் தடுக்க முடியாதா? முடியும். ஆனால் லாபநோக்கம் மட்டுமே கொண்ட பேராசை பிடித்த மனிதர்களிடமிருந்து உலகைக் காப்பாற்றினால்தான் அது சாத்தியம். அவர்கள்தான் ஆலைக் கழிவுகள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தக் காரணமாகிறார்கள் ; அவர்கள்தான் அவசியமே இல்லாத ஆபத்தான மருந்துகளை மருந்துக்கடைகளில் கொணர்ந்து குவித்து நம்முடைய உயிரோடு விளையாடுகிறார்கள் ; அவர்கள்தான் மனிதகுலத்தின் நண்பர்களான காடுகளை அன்றாடம் அழித்து இயற்கை நாசத்தை விளைவிக்கிறார்கள் ; அவர்கள்தான் நாசகர குண்டுகளைத் தயார் செய்து அவற்றை மனிதர்கள் தலையில் போட்டு பரிசோதனை செய்கிறார்கள் ; அந்தப் பாவிகள்தான் அணுகுண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகி மக்களைக் கொன்று குவித்தார்கள்…

முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?   

ஆயுத உற்பத்திக்காக இன்று செலவழிக்கப்படுகிற பணம் எவ்வளவு தெரியுமா? நமது இதயம் ஒருமுறை துடிக்கிற நேரத்தில் இந்த உலகில் இரண்டு லட்சம் ரூபாய் யுத்தத்திற்காகச் செலவழிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 7 லட்சம் கோடி ரூபாய் யுத்தத்திற்காகவும் ஆயுத உற்பத்திக்காகவும் செலவழிக்கப்படுகிறது. இது 150 கோடி  சாதாரண மக்களுடைய மொத்த வருமானத்திற்குச் சமம். உலகத்திலுள்ள ஆயுத உற்பத்திச் சாலைகள் 17 நாட்களுக்கு ஆயுத உற்பத்தியை நிறுத்திவிட்டு, அத்தொகையைக் குடிநீர் அளிக்க செலவழிக்குமானால், உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குச் சுத்தமான குடிநீர் அளிக்க முடியும். 20 கோடி ரூபாய் செலவழித்து       எஃப்-16 போர் விமானம் தயாரிக்கும் தொகையைக் கொண்டு 40000 கிராம மருத்துவமனைகளை ஏற்படுத்த முடியும்.

இத்தகைய கேடுகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது? அறிவியலின் ஆக்கபூர்வ பலன்களைப் பற்றி மக்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் அது சாத்தியம்.

அப்படியென்றால், அறிவியல் என்பது என்ன? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடையை உருவகப்படுத்தி வைத்திருப்பார்கள். அறிவியல் நம்முடைய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்ட காலத்திலும் படிப்பறிவில்லா மக்களுக்கு அறிவியல் சாதனங்கள் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றன. ஏன்? அறியாமையில் பிறப்பதுதான் ஆச்சரியம். ஆச்சரியம் என்பது அறியாமையின் குழந்தை. ஆச்சரியம் மிகும்போது, ஒருவித பயம் ஏற்படும். தொற்றுநோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போட வரும் சுகாதார அலுவலர்களைக் கண்டு கிராம மக்கள் பயந்து ஓடுவது இந்த அறியாமையின் காரணமாக ஏற்படும் பயத்தின் விளைவாகத்தான்.

அறிவியலை சமூகத்தின் சொத்தாக மாற்ற வேண்டுமானால், அறிவியலின் தன்மை என்னவென்று மக்களை அறிய வழி செய்ய வேண்டும். அறிவியல் என்றால் என்னவென்றே புரியாமல் யாரும் அறிவியலைத் தனதாக்கிக் கொள்ள முடியாது. அறிவியலைக் கற்றறிந்த மேதைகள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், சாதாரண மக்களுக்குப் புரியாது என்று யாராவது கூறினால் அது ஒரு மோசடியான பிரச்சாரம். அறிவியலை சாதாரண மக்களிடம் நிச்சயம் கொண்டு செல்ல முடியும்.

ஆதாரம் : கே.கே. கிருஷ்ணகுமார் எழுதியுள்ள “வாழ்வே அறிவியல்”

Tags: 

Leave a Reply