அபுதாபி அய்மான் சங்கம் இஃப்தார் மற்றும் பத்ர் போர் நினைவு தினம்!

zakir hussain aalim speech

அபுதாபி அய்மான் சங்கம் இஃப்தார் மற்றும் பத்ர் போர் நினைவு தினம்!

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் செயல்படும் அய்மான் சங்கத்தின் சார்பில் இஃப்தார் விருந்து மற்றும் பத்ர் சஹாபாக்கள் நினைவு தின நிகழ்ச்சி சிறப்போடு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.

ஹாபிழ் முபாரக் அலவி இறைமறை வசங்கள் ஓதினார். அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியின் துவக்கவுரையை அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் பெரியபட்டினம் மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ நிகழ்த்தினார். நிகழ்சியில் அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் கீழ்க்காணும் கவிதையை வாசித்தார்கள்:

\\ஆயிரம் எதிரிகள் அங்கே

…..ஆயுதம் அற்றவர் இங்கே
ஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)
…ஆணையைத் தயக்கமும் இன்றி!

சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்
….சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)
அற்புதம் என்பதை அங்கே
…. அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!

வானவர்க் கூட்டமும் வந்து
…..வாளினால் வெட்டிட உதவ
ஆணவக் கூட்டமும் ஒழிந்து
…அக்களம் வென்றனர் காணீர்!

இச்சிறு கூட்டமும் வெற்றி
….இன்றியே அழியுமே யானால்
அச்சமாய் உன்னையும் அல்லாஹ்(என்று)
….அழைத்திட எவருமே உண்டோ”

நெற்றியைத் தரையினில் வைத்து
….நெகிழ்வுடன் நபிகளார்(ஸல்) வேண்ட
வெற்றியைத் தருவதை அல்லாஹ்
….வேகமாய் நிறைவுற செய்தான்!

தீனெனும் செடியினைக் காத்த
…தியாகிகள் இலையெனில் நாமும்
தீன்குல பிறப்பினில் இல்லை
…தியாகிகள் நினைவுகள் வேண்டும்
 

பத்ர் போரின் நிகழ்வுகளையும் அதில் கலந்து கொண்ட நபித் தோழர்களின் தியாகங்களையும் விவரித்து லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மெளலவி ஜெ.ஜாக்கிர் ஹுஸைன் பாஜில் மன்பஈ சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் இறையச்சத்தின் அவசியத்தைப் பற்றியும் சமுதாயத்தில் தோன்றும் பிரச்சினைகளை எவ்வாறு கையாண்டு தீர்வு காண்பது என்பதை விளக்கியும் உரையாற்றினார்.

ஹாபிழ் மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி சிறப்பு துஆ ஓதினார்.

சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் விதத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மானுக்கு சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் ஷாஹுல் ஹமீத் அவர்களும்,லால்பேட்டை அரபிக் கல்லூரிப் பேராசிரியர் மெளலவி ஜாக்கிர் ஹுஸைன் பாஜில் மன்பஈ அவர்களுக்கு திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் செயலாளர் கீழை சையத் ஜாஃபர் அவர்களும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.

அய்மான் சங்கத்தின் சேவைகளான திருக் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆடியோ கேசட்,சிடி,அய்மான் மொபைல் குர்ஆன், அய்மான் மகளிர் கல்லூரியின் கல்விப் பணி,மக்கள் நலப் பணிகள் வரிசையில் மிக சமீபத்தில் உருவாகியிருக்கும் அய்மான் பைத்துல் மால் (அறக்கட்டளையில்) சேர்ந்து நன்மையடைய அனைவர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் அய்மான் ரேடியோவில் திருக் குர்ஆன் ஒளிபரப்பு சேவைப் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் அபுதாபியில் செயல்பட்டு வரும் அமைப்புக்கள்,மற்றும் சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பல்வேறு ஊர் ஜமாஅத் அமைப்புக்களின் நிர்வாகிகள் சமுதாயப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது நிகழ்ச்சியை நெறிபடுத்தி தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளான துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி பாஷா,செயலாளர்கள் களமருதூர் ஷர்புத்தீன்,காயல்பட்டினம் முஹம்மது அன்சாரி,செயற்குழு உறுப்பினர்கள் காயல் ஷேக்னா லெப்பை,திருச்சி அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: , , , ,

Leave a Reply