‘அடி மடியிலயே கை வச்சிட்டார் மோடி..!’ – கொதிக்கும் மெக்கானிக்குகள்!

‘அடி மடியிலயே கை வச்சிட்டார் மோடி..!’ – கொதிக்கும் மெக்கானிக்குகள்!சென்னை: மத்திய அரசு கொண்டு வரவுள்ள சாலை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக இரு சக்கர வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள சாலை பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக, தமிழகம் முழுவதும் இன்று  இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள செயின்ட் ஜான் சர்ச் முன்பு,  திருச்சி மண்டல  இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மண்டல இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, இச்சங்கத்தின் தலைவர் செல்வம் தலைமை தாங்க, 300க்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய அரசு கொண்டு வரவுள்ள சாலை பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

கூட்டத்தில் பேசிய செல்வம், ”மத்திய அரசு கொண்டு வரவுள்ள சாலை பாதுகாப்புச் சட்டத்தினால், தமிழகத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கவும், அந்தத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்ற அவர்களது குடும்பங்களின் வாழ்வு கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாங்கள் மட்டுமல்லாமல்  இருசக்கர வாகனங்களை வைத்துள்ள ஒரு கோடிக்கு மேற்பட்டோரும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

புதிய சட்டத்தின்படி, நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைகள் வைக்கவோ, உதிரிபாகங்கள் விற்கவோ முடியாது. எந்த கம்பெனி வாகனம் விற்பனை செய்கிறதோ, அந்த கம்பெனி மட்டும்தான் அந்த வாகனங்களைப் பழுதுபார்க்க முடியும், அவர்களது உதிரி பாகங்களை மட்டும்தான் பொருத்த முடியும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதன் மூலம், மத்திய அரசு முதலாளிகளுக்கான அரசு என்பதை காட்டுகிறது.

புதிய சட்டத்தின்படி, உதிரிபாக விற்பனையாளர்கள், லேத் ஒர்க்ஸ், டிங்கர், பெயிண்டர், எலக்ட்ரீசியன், வல்கனைசிங் உள்பட லட்சக்கணக்கான தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நாங்கள் எல்லோரும் மத்திய-மாநில அரசுகளின் உதவிகள் பெறாமல் சுயமாக தொழில் செய்து வருகின்றோம். எங்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்த சட்டத்தால் தமிழகத்தில்  10 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், ஒரு கோடி உரிமையாளர்களும் பாதிக்கப்படுவார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழகம் முழுக்க இன்று தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றோம். மக்களுக்கு துரோகம் செய்கின்ற செயல்களை மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து செய்தால், நாங்கள் அடுத்தக்கட்ட போராட்டங்களை எடுக்க தயங்கமாட்டோம்” என்றார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி கே.கே. நகரில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் தாயுமானசுவாமி நம்மிடம்,  ”எனக்கு 40 வயசாகுதுங்க. வறுமையின் காரணமாக பத்தாவதுக்கு மேல படிக்கல, படிப்பை பாதியிலேயே விட்டுட்டு மெக்கானிக்  வேலை கற்றுக்கொள்ள போனேன்.

இப்போ நான் தனியாக கடை வைத்திருக்கிறேன். இந்த தொழிலில் சம்பாதித்து திருமணம் பண்ணிய எனக்கு, இரண்டு பிள்ளைகள் இருக்காங்க.

இந்த நிலையில் அரசாங்கமே நீ வேலை செய்தல் கூடாதுன்னா நாங்க எங்க போவோம், என்ன ஆவோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மாற்றம் மாற்றம்னு சொன்னாங்களே, அதை நம்பி மோடிக்கு ஓட்டு போட்டோம். ஆனால், கடைசியில் எங்க அடிமடியிலயே கை வச்சிட்டார் மோடி.

இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்து தனியார் முதலாளிகளுக்கு முன்னுரிமை வழங்குகிறார். ஆனால், எங்களை போன்ற சராசரிகளுக்கு அப்படி எதையும் செய்ததாக தெரியவில்லை. இப்படி செய்தால் நாங்கள் எப்படி பொழைக்கிறது?” என்றார் காட்டமாக

சி.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி..மணிகண்டன்

__._,_.___
Tags: , , , ,

Leave a Reply